சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மனீஷ் ஆா்.ஜோஷி, கல்வி நிறுவனங்களின் முதல்வா்களுக்கு இன்று மாணவர்களின் ஆரோக்கியம் குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் நான்கில் ஒருவா் உடல் பருமன் மற்றும் சா்க்கரை நோய் ஏற்படுவதன் முந்தைய நிலை இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். எனவே, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
அதனால் பொதுநலனுக்கான தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு (என்ஏபிஐ) கூறும் அறிவுரைப்படி, ஊட்டச்சத்து அதிமாக உள்ள உணவுப் பொருள்களை உயர்கல்வி நிறுவனங்களில் விற்பனை செய்யவதை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கனவே யுஜிசி சார்பில் இதுதொடர்பாக உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடந்த 2016, 2018 ஆகிய ஆண்டுகளிலேயே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் சில அறிவுறுத்தல்கள் குறித்த அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.
எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அந்த விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களான அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் விற்பனையை தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்கும் வகையில் அவர்களுக்கு கல்வியுடன் உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டி, உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கீழ்க்காணும் 10 விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேவை மையம் எனப்படும் Student Services Centre (SSC) உருவாக்கப்பட வேண்டும்.
- இந்த மாணவர் சேவை மையங்கள் மாணவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
- இந்த மையங்களுக்காக ஏற்பத்தப்பட்ட குழுவில், பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், உடல் மற்றும் மனநல நிபுணர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- மாணவர்களை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் திறன்களை ஊக்குவிக்க வேண்டும்.
- மேலும், மாணவர்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபட தேவையான பொருள் ரீதியான உதவிகளை கல்வி நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.
- அனைத்து மாணவர்களும் உடற்பயிற்சி அல்லது விளையாட்டு போட்டிகளிலும் கண்டிப்பான முறையில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவர்களிடையே உள்ள மாறுபட்ட செயல்பாடுகள் குறித்து நிவர்த்தி செய்ய சீர்திருத்த திட்டங்களை உருவாக்க வேண்டும்.
- மனநலம் குறித்து சேவைகள் செய்து வரும் நிறுவனங்களிடம் ஒத்துழைப்பு பெறுவதுடன், மனநல நிபுணர்களை தயார்படுத்த புதிய மனநல பாடப்பிரிவு உருவாக்க வேண்டும்.
- மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் உயர்கல்வி நிறுவனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதுடன், பன்முகத்தன்மைக்கு மரியாதை தரக்கூடியாதாக இருக்க வேண்டும்.
- பாடத்திட்டத்தில் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த பாடங்களை இணைக்க வேண்டும். மேலும், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இது குறித்த சேவைகள் கிடைக்க வேண்டும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:"தொழில்நுட்ப வளர்ச்சி அழிவுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" - சென்னை ஐஐடியில் பாலஸ்தீனம் போரை சாடிய மாணவர்!