புனே:மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 46 வயதான மருத்துவர் ஒருவர் ஜிகா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார். அவரிடம் இருந்து அவரின் 15 வயது மகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று பரவி இருக்கிறது. இது தொடர்பான அறிகுறிகள் இருந்த நிலையில், இருவருக்கும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஜிகா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? ஜிகா என்பது ஒரு வைரஸின் பெயர். இந்த வைரஸை டெங்கு காய்ச்சலை பரப்பும், ஏடிஸ் (Aedes) கொசுக்கள்தான் பரப்புகிறது. பருவமழை காலத்தில் தேங்கி நிற்கும் நன்நீரில் இருந்து பரவும் இந்த கொசுக்கள், ஜிகா வைரஸ் தொற்றை பரப்புகிறது.
இதன் அறிகுறிகள் என்ன? எத்தனை நாட்கள் வரை இருக்கும்?காய்ச்சல், உடல்வலி, தலைவலி, கண்களில் சிவப்பு உள்ளிட்டவை பொதுவான காரணிகளாக இருந்தாலும், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுவது முக்கிய அறிகுறியாக இருக்கும். ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்குவதன் மூலம், 2 முதல் 7 நாட்களில் மெதுவாக குணமடைய முடியும்.
இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? யார் யார் பாதிக்கப்படுவார்கள்?இந்த ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களை பாதித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கண் பார்வை மற்றும் கேள்வி திறனில் பாதிப்பு ஏற்படலாம். மேலும் குழந்தைகளில் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, கருவில் இருக்கும் குழந்தை கலைந்து போகவும், குறை பிரசவம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.