சென்னை:இந்தியர்கள் ஆரோக்கியமான தின்பண்டங்களில் நாட்டமுடையவர்களாக இருப்பதாக தி ஹெல்த்தி ஸ்நாக்கிங் அறிக்கை-2024 (The Healthy Snacking Report-2024) மூலம் தெரிய வந்துள்ளது. உணவுப் பொருட்களில் கலப்படம், பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பது ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், பார்ம்லே என்ற தின்பண்ட உற்பத்தி நிறுவனம், மக்களின் உணவுத் தேர்வுகளை அறியும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
சுமார் 6 ஆயிரம் பேரிடம் நடத்திய கணக்கெடுப்பில் 73 சதவீத மக்கள் தின்பண்டங்களை வாங்குவதற்கு முன், பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும் அந்த பண்டத்தில் சேர்த்துள்ள பொருட்கள், ஊட்டச்சத்து மதிப்புகளின் விவரங்களை படிப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களில் 93 சதவீதம் பேர் ஆரோக்கியமான உணவுகளுக்கு மாற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். கணக்கெடுக்கப்பட்ட ஒவ்வொரு பத்து பேரில் ஒன்பது பேர் பாரம்பரிய தின்பண்டங்களுக்கு மாற இருப்பதாக கூறினர்.
இந்த ஆய்வறிக்கையின் படி, 60 சதவீத இந்தியர்கள் பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட இயற்கையான ஆரோக்கியமான தின்பண்டங்களை தேர்வு செய்கின்றனர். 67 சதவீத இந்தியர்கள் ட்ரை ப்ரூட்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மக்கானா ஆகியவற்றை விரும்புவதாக கூறியுள்ளனர்.