சென்னை:உலக நாடுகளில்விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மாடுகளிடம் இருந்து பரவும் நோய் குறித்தும், மாற்றம் செய்யப்பட்ட மாடுகளின் பாலை பருகுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்தும், மண்ணியல் ஆய்வாளர் மற்றும் சுற்றுசூழல் அறிஞர் பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில் ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேராசிரியர் சுல்தான் அஹமது இஸ்மாயில் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதில் அவர் கூறியதாவது, "நம் நாட்டில் உள்ள மாடுகளிடம் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பசு மாடுகளிடம் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அறிவியல் ரீதியாக சில வேலைகளைச் செய்கின்றன. இதில் காளை மாடுகளின் X மற்றும் Y குரோமோசோமை தனித்தனியாக பிரித்து X குரோமோசோமை மட்டும் தனியாக எடுத்து சேமித்து, அதை பசு மாடுகளின் கருமுட்டையில் செலுத்துகின்றனர். இதனால் பெரும்பாலும் பசு மாடுகளே பிறக்கின்றன. மேலும், அதைமீறி காளை மாடுகள் பிறந்துவிட்டால் அதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.
இதைச் செய்வதற்கு காரணம், மாடுகள் இயற்கையாக இனப்பெருக்கம் செய்தால், ஒரு மாடு மட்டும் தான் கன்றுக்குட்டியை ஈன்றெடுக்கும். ஆனால், இந்த முறையில் பல பசு மாடுகள் கருவுற்று, பசுக் கன்றுகளை ஈன்றெடுக்கிறது. இதனால் மரபணு மாற்றம் ஏற்படுகிறது. மேலும், கலப்பின மாடுகளும் தற்போது உருவாகி வருகின்றன.
இதில் பால் என்பது தற்போது வியாபாரப் பொருளாக மாறிவிட்டதை கருத்தில்கொள்ள வேண்டும். எனவே, தொழிற்துறையினர் மாடுகளை ஒரு வியாபாரப் பொருளாக பார்க்கின்றனர். மாடுகளில் Bovine Growth Injection செலுத்துகின்றனர். இந்த ஊசி பால் சுரப்பதை அதிகரிக்கும். இவர்கள் மேற்கொள்ளும் தவறான முயற்சியால் வருங்காலத்தில் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அவற்றுள் குறிப்பாக, இந்த மாடுகளின் பாலை குடிக்கும் பெண் குழந்தைகள் 6 முதல் 8 வயதிலேயே வயதிற்கு வந்துவிடுகின்றனர். இந்த மாற்றம் தற்போது மனிதர்களிடையே ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 15 வயது நிறைவடைந்த சிறுவனுக்கு தாடி, மீசையெல்லாம் அதிக அளவில் வளர்கின்றது. இது முறையான மனிதனின் வாழ்வியல் சங்கிலியை பாதிக்கிறது.
முதலில் எந்தவொரு திட்டம் வகுத்தாலும் சுற்றுசூழலுக்கு ஏற்ப வடிவமைப்பார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. மனிதனை மட்டுமே கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதனால் விலங்குகள், தாவரங்களின் நிலைமை பெரிதளவில் பாதிக்கிறது. பொதுவாகவே இவை அனைத்தும் இயைந்து இருப்பதுதான் உலகம்.
இத்தகைய மாற்றங்கள் ஜூனோடிக் நோய்கள் (Zoonotic diseases) என்ற நோயை உருவாக்குகிறது. இந்த ஜூனோடிக் நோய் என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய் வகையாகும். இந்த நோய் சுற்றுச்சூழலில் ஏற்படும் செயற்கையான மாற்றங்களால் உருவாகிறது.
குறிப்பாக, கரோனா தொற்று கூட ஒரு வகை ஜூனோடிக் நோய்தான். இந்தியாவில் பெரும்பாலும் இறைச்சி உணவுகளை நன்கு வேகவைத்து சாப்பிடுவோம். ஆனால் சில நாடுகளில் அவ்வாறு இல்லை. அரை பதத்தில் வேகவைத்து, அல்லது பச்சையாக கூட சாப்பிடுகின்றனர். இதனால் அந்த இறைச்சிகளில் இருக்கக்கூடிய நுண்ணுயிரிகள் மனிதனுக்கு எளிதில் பரவுகின்றது.
அதுமட்டுமின்றி, மக்கள் குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சி மற்றும் உணவு போன்றவைகளை வைத்து 3, 4 நாட்கள் கழித்து சூடு செய்து சாப்பிடுகின்றனர். ஆனால், அந்த உணவில் நுண்ணுயிரிகள் எவ்வளவு இருக்கும், நாம் எந்த அளவிற்கு சூடு செய்ய வேண்டும், சரியாக சூடு செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்ற அபாயம் இன்னும் பலருக்கும் தெரிவதில்லை.
தற்போது மனிதவரு நோய் (Anthroponotic disease) என்ற நோயும் பரவி வருகிறது. இந்த நோயானது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் நோயாகும். கரோனா காலத்தில், சென்னையில் இருக்கக்கூடிய விலங்குகள் காப்பகத்தில் இருந்த சிங்கம் ஒன்றை பாதுகாப்போருக்கு இருந்த தொற்று, சிங்கத்திற்கு பரவி சிங்கம் இறந்து போனது. அதே மாதிரி பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் அதிகமானால் அதை கட்டுப்படுத்த முடியாது.
உயிரியலில் அனைத்து ஜீன்களும், ஒவ்வொரு விதமான புரதத்தை வெளிப்படுத்தும். இது அமினோ அமிலத்தின் சங்கிலியாக இருக்கும். இந்த DNA அமைப்பில் ஒவ்வொரு ஜீனும் அமினோ அமிலம் புரதத்தை உருவாக்கும். தற்போது கலப்பினம் என்று சொல்லக்கூடிய மரங்களாக இருந்தாலும், பாலூட்டிகளாக இருந்தாலும் DNA அமைப்பில் புதியதாக ஒரு அமினோ அமில புரதத்தை வெளியிடுகிறது.
இதனால் இயற்கையாக இருக்கக்கூடிய ஆரோக்கியமான சங்கிலி அமைப்பில் சம்பந்தம் இல்லாத ஒரு ஜீனை இணைக்கும் போது, அது ஒரு வகையான புரதத்தை வெளிப்படுத்தும். அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இது தாவரங்களிடையே சத்துக் குறைபாடு, மனிதர்களுக்கு விதவிதமான நோய்கள் உருவாவதற்கு வழிவகுக்கிறது. இயற்கையாக விளையக்கூடிய எந்த ஒரு பொருளையும் நம் இஷ்டத்திற்கு வடிவமைக்க முடியாது.
இதற்கு எடுத்துக்காட்டாக, இயற்கையாக விளையக்கூடிய கத்தரிக்காய், தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை நம்மால் வடிவமைக்க முடியாது. ஆனால், அதில் ஏதேனும் ஒரு மரபணு மாற்றம் செய்தால் போதும், நம்மால் எளிதாக மாற்ற முடியும். மீண்டும் இதற்கு ஒரு எடுத்துகாட்டாக, வெர்மிடெக் (vermitech) எடுத்துக் கொள்வோம். வெர்மிடெக் என்பது மண்புழு உரம் ஆகும். முதலில் இதை vermi culture bio technology - vermi composed என்று தான் அழைத்தனர். பின்னர், vermitech என்று என்னால் மாற்றப்பட்டது. தற்போது நான் கண்டுபிடித்த பெயரை வெளிநாட்டு நிறுவனங்கள் பலர் பயன்படுத்துகின்றனர்.
இது சம்பந்தமாக 1978 - 1979 ஆண்டுகளில் ஆராய்ச்சிகளை ஆரம்பித்தேன். சென்னையில் விவசாயம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வில் நானும் ஏ.பி.ஜே.அப்துல் காலம் கலந்து கொண்டோம். நாங்கள் இருவரும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்து எதிராக பேசினோம். அப்போது என்னுடைய ஆராய்ச்சி அடங்கிய சிடியை அவரிடம் வழங்கினேன்.
அவர் என்னுடைய ஆராய்ச்சிகளை அனைத்து வேளாண்மை துறைக்கும் அனுப்பிவைத்தார். இதை வைத்து மண்புழு உரம் தயாரிப்பது குறித்து இந்தியா முழுவதும் இதற்கான விழிப்புணர்வு வெளியிடபட்டது" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:இந்த 5 பழங்கள் போதும்.. டெங்கு பாதிப்பின்போது ரத்த பிளேட்லெட்கள் எண்ணிக்கையை சுலபமாக அதிகரிக்கலாம்!