சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவலின்படி, நீரிழிவு நோய் இந்தியாவில் வளர்ந்து வரும் தொற்றுநோயாக உள்ளது, 10 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நபர்களில் கணிசமான பகுதியினர் பலவீனமான சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.
இதுமட்டும் அல்லாது, நீரிழிவு நோயாளிகள் நரம்பியல் நோயை அனுபவிக்கின்றனர். இது நாள்பட்ட வலி, உணர்வின்மை, இருதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இரண்டு முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கும். இத்தகைய நீரிழிவு நோய்க்கு பெரும்பாலும் இதற்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
மேலும், இந்தியாவில் நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் சுமையை குறைக்கும் விதமாக காவேரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள நீரிழிவு சிகிச்சை மையத்தை, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், குடிமைப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இந்த அதிநவீன மையத்தில், நரம்பியல், இதயவியல், சிறுநீரகவியல், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, பாத பராமரிப்பு, உணவு முறை மற்றும் உடலியக்க நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிபுணர்களை ஒன்றிணைத்து, நீரிழிவு சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரிவான மற்றும் சிறப்பான பராமரிப்பை வழங்கப்பட உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.