பருவ காலம் மாறும் போது, புதிய ஊர்களுக்கு சென்று தண்ணீர் குடிக்கும் போதும், மற்ற பகுதியின் தட்ப வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது பலருக்கும் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, குரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதிலும், குறிப்பாக குளிர்காலம் வந்துவிட்டால் பெரும்பாலானோர் தொண்டை வலி பிரச்சனையினால் அவதிப்படுகின்றனர். இந்த மாதிரியான சூழலில் தொண்டை வலியை சமாளிக்க வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் மசாலா பொருட்கள் உடனடி நிவாரணம் தரும். அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
மஞ்சள்:உலகம் முழுவதும் மருத்துவ குணங்களுக்காக அறியப்படும் மஞ்சள், அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் இம்யூனாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தொண்டை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் மஞ்சளில் உள்ள குர்க்குமின் எனும் வேதிப்பொருள் உதவியாக இருப்பது தெரியவந்துள்ளது. வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து தூங்க செல்வதற்கு முன் குடித்தால், காலையில் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இஞ்சி:இஞ்சி பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதிலுள்ள ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் (gingerol and shogaol) எனும் வேதிப்பொருட்கள், வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் விளைவுகளைக் கொண்டுள்ளன. இஞ்சி சாறு சுவாச நோய்த்தொற்றுகளுக்கு காரணமான சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியை திறம்பட தடுக்கிறது என ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. இஞ்சித் துண்டுகளை நன்கு தட்டி தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இஞ்சி டீயைப் பருகுவது, தொண்டை எரிச்சலை குறைக்கும். மேலும், அதில் தேன் சேர்த்து குடிப்பது கூடுதல் நன்மைகளை தரும்.
கிராம்பு:கிராம்பில் உள்ள யூஜெனோல் (eugenol) பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொண்டை வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது. பைட்டோதெரபி ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கிராம்பு எண்ணெய் வலியைக் குறைப்பதில் நல்ல நிவாரணம் தரும் என தெரிய வந்துள்ளது. தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற, இரண்டு கிராம்பை மெதுவாக மென்று சாப்பிடுங்கள் அல்லது கிராம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து நீர் பருகலாம்.