காலையில் எழுந்ததும் நம்மில் பலர், தங்கள் நாளை ஒரு கப் காபியுடன் தொடங்குகிறோம். சிலர் பாலுடனும், சிலர் பால் இல்லாமல் பிளாக் காபி குடிக்க விரும்புவார்கள். காபியை பொருத்தவரையில், பால் சேர்த்த காபியை விட பிளாக் காபி நல்லது. இருப்பினும், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப அதிகளவிலான பிளாக் காபி நுகர்வு பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க..
தூக்கமின்மை: வேலை நேரங்களில் தூக்கம் அல்லது சோர்வாக இருக்கும் போது, ஒரு காபி குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என பலர் சொல்லி கேட்டிருப்போம். தூக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தி தூக்கத்தை தடுக்கும் தன்மை காபியில் உள்ள காஃபினிற்கு உள்ளது என ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், தூங்க செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன் காபி குடிப்பதை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் காபி நுகர்வை முற்றிலுமாக குறைக்க வேண்டும்.
மன சோர்வு:மனநல மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அதிக அளவு பிளாக் காபி நுகர்வு கார்டிசோல் (cortisol) போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது அதிகரித்த இதய துடிப்பு, பதட்டம் மற்றும் நடுக்கத்தை ஏற்படுத்து வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செரிமான பிரச்சனை: அதிகமான பிளாக் காபி நுகர்வு, உடலில் அமிலத்தன்மை அதிகரித்து நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் எரிச்சல் போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படுத்தும் என 2022ல் NCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம்: காஃபின் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் விஷயங்களில் ஒன்றாகும். இதய பிரச்சனைகள் அல்லது உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது, இதயம் தொடர்பான பிரச்சனைகளின் சிக்கல்களை குறைக்க உதவுகிறது.