ஹைதராபாத்:காய்ச்சல் காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு 10 பேரிலும் குறைந்தபட்சமாக 3 முதல் 4 நபர்கள் டெங்கு பாதிப்புக்கு ஆளாகின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் வெப்ப அலை வீசி வந்த நிலையில், அவ்வப்போது கோடை கால பருவ மழையும் பெய்து வருகிறது.
மழைக்காலம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், இது தொற்றுகள் மற்றும் நோய்களுக்கான காலமாகவும் இருக்கின்றது. குறிப்பாக, மழை காலத்தில் அங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரால் டெங்கு பாதிப்பு ஏற்படும் நிலையில், ஹைதராபாத்தில் இந்த வருடம் தொடங்கி தற்போது வரை 600க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்ற தகவல் குடியிருப்பு வாசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் பெய்து வரும் பருவ மழை காரணமாக, ஆங்காங்கே தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்குவிற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, ரங்காரெட்டி, சங்காரெட்டி,ஹைதராபாத், மேட்சல்-மல்காஜ்கிரி ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளேட்லெட்வீழ்ச்சி(LowPlatelet Count): தட்டணுக்குள் (Platelet) குறைவது டெங்கு பாதிப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று என எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத்துவர்கள். செகந்தராபாத் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்டும் ஒவ்வொரு 10 நபர்களிலும் 3 முதல் 4 நபர்கள் டெங்கு பாதிப்புக்கு ஆளாகின்றனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தட்டணுக்கள் குறைவதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்சனைகளையும் எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போல, கொசுக்களால் ஏற்படும் மற்றொரு வகையான கன்யா காய்ச்சலால் (Ganya fever) பாதிக்கப்படுபவர்கள் கடுமையான மூட்டு வலியையும் எதிர்கொள்கின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முதற்படியாக விழிப்புணர்வே முக்கியம் என்கிறார் கிம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சிவராஜ்.