சென்னை:கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது எனவும், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் தான் இதய நோய், நீரிழிவு நோய் ஏற்படுவதாகவும், ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதில் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உலக நுண்ணுயிர் (தீங்கு ஏற்படுத்தும்) எதிர்ப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவரும், உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கலந்து கொண்டார். அவருடன், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலாளர் எஸ். வின்சன்ட் பங்கேற்று, இருவரும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.
சௌமியா சாமிநாதன் பேட்டி (Credits - ETVBharat Tamil Nadu) ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் உயிரிழப்பு?: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சௌமியா சாமிநாதன், "நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதற்கு பொது மக்களுக்கு சரியான விழிப்புணர்வு தேவை. கரோனா காலகட்டத்தில் அதிக அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது.
கரோனா காலகட்டத்தில் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மக்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் உடலில் அதிக அளவில் மருந்தின் வீரியம் அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் 20 லட்சம் பேர் இறந்து போகும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஆண்டிபயாட்டிக் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு தேவை. காய்ச்சல், சளி போன்றவை ஏற்பட்டால் அவை தொற்றாக பரவுகிறது. பாராசிட்டாமல் மாத்திரை, எடுத்துக் கொள்வதைவிட, இஞ்சி ,மிளகு,துளசி போன்றவற்றை எடுத்துகொண்டாலே காய்ச்சல் சளி போன்றவை குறைந்து விடும்.
கடுமையான விதிமுறைகள் வேண்டும்:காய்ச்சல் சளி போன்றவற்றிற்கு ஆண்டிபயாட்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பாக்டீரியா தொற்று என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆண்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது. மற்ற நாடுகளில் ஆண்டிபயாட்டிக் மருந்து வழங்குவதில் கடுமையாக விதிமுறைகளை பின்பற்றுவதை போல நம் நாட்டிலும் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:நீரிழிவு நோயாளிகளை குறிவைக்கும் கண் பிரச்சனை; தீர்வு உண்டா? மருத்துவர் விளக்கம்!
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்குவதற்காக குழு செயல்படுத்த வேண்டும். கண்காணிப்பு கட்டுப்பாடு போன்றவற்றை மருத்துவக் குழுவினர் மூலமாக கண்காணிக்க வேண்டும். எந்த நோயாளிக்கு இதுபோன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.
அவசியமின்றி ஆன்டிபயாட்டிக் பயன்படுத்தக் கூடாது இதை முறையாக பின்பற்ற வேண்டும். ஆன்டிபயாட்டிக் தரவுகளை வெளிப்படையாக மக்கள் முன் தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு அது குறித்தான விழிப்புணர்வு ஏற்படும். ஆண்டிபயோடெக் மருந்துகளின் அட்டையில் சிவப்பு நிறத்தில் குறியீடு போடப்பட வேண்டும். அதன் மூலம் பொது மக்களும் எளிதில் தெரிந்துக் கொள்ள முடியும்.
தடுப்பூசியால் பாதிப்பு?:குறிப்பாக, தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது 0.001 சதவீதம் அளவிற்கு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட 10 லட்சம் பேரில் இரண்டு பேருக்கு பக்க விளைவுகள் அதிகமாக இருக்கலாம். கரோனா பேரிடர் காலத்தில் அதிகளவு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொண்டதால் கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டது.
கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது. கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தான் இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 10 பாராசிட்டமில் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கிட்னி செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.
எனவே மருந்துகளை அளவுடனும் கட்டுப்பாட்டுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உலகம் முழுவதும் ஆண்டிற்கு 20 லட்சம் பேர் வரை இறக்கின்றனர். நுண்ணுயிர் தொற்று காரணமாக இந்தியாவில் ஆண்டிற்கு 50 ஆயிரம் பிறந்த குழந்தைகள் இறக்கின்றனர். இனி வரக்கூடிய காலங்களில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவக் கூடும் அதனால் எச்சரிக்கையாக அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.
விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் மூலமும் நோய் தொற்றை உருவாக்கும் நூண்ணுயிர் கிருமிகள் வருகிறது. ஒரே நாடு ஒரே சுகாதாரத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கு வரும் 4 ந் தேதி ஆலோசனை நடைபெறுகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னை மருத்துவமனையில் ரோபோட்டிக்ஸ் மூலம் அறுவை சிகிச்சை; மருத்துவ கட்டணம் எவ்வளவு? பாதுகாப்பானதா? மருத்துவர் விளக்கம்!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்