சென்னை:இந்தியாவில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் சண்டிபுரா வைரஸால் (Chandipura vesiculovirus) குஜராத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளிடத்தில் மணல் ஈக்கள் (Sandfly) மூலம் பரவும் இந்நோய் 24 முதல் 48 மணி நேரத்தில் மரணத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த சண்டிபுரா வைரஸ் தொற்று புதியவகை வைரஸ் அல்ல. ஏற்கனவே, 14 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டதுள்ளது குறிப்பிடத்தக்கது. அதைவிட முதன்முதலில் 1965ஆம் ஆண்டு மகாராஷ்டிரா, நாக்பூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள சில பழங்குடியினக் கிராமத்தைச் சேர்ந்த 17 உயிர்களை பறித்துள்ளது. ஆனால், இந்த வைரஸ் தொற்றை தவிர்க்கும் விதமாக மணல் ஈயை விரட்டும் பொருட்கள் வைத்து அவற்றை விரட்டிய நிலையில், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது.
எப்படி பரவுகிறது: இந்நோய் குறித்து ரேலா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் வேல்முருகன் கூறுகையில், "சண்டிபுரா வைரஸால் குஜராத்தில் 6 குழந்தைகள் இறந்துள்ளனர். ராப்பிடோவைரிடே (Rhabdoviridae) என்ற வைரஸ் மூலமாக இந்நோய் பரவுகிறது. அதாவது மணல் ஈக்கள் என்னும் பூச்சிகளின் கடியால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோய் 9 மாத குழந்தை முதல் இருந்து 15 வயது வரை குழந்தைகளை அதிகம் தாக்குகிறது.