தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Health Team

Published : Sep 4, 2024, 3:26 PM IST

Updated : Sep 4, 2024, 5:25 PM IST

ETV Bharat / health

பிரச்சனை இல்லாம நைட் ஷிப்ட் பாக்கணுமா? ஹெல்த்தும் முக்கியம்! வேலையும் முக்கியம்! - Health tips for Night Shift workers

Health tips for Night Shift workers: நீங்களும் நைட் ஷிப்ட் வேலை செய்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா? இல்லையென்றால், இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

ஹைதராபாத்:பகல் வேலை செய்பவர்களை விட நைட் ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு 25 சதவீதம் உடல் பருமன் வரும் வாய்ப்பும், 35% தொப்பை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகநேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (National Library of Medicine) தெரிவித்துள்ளது.

தினமும் காலையில் எழுந்து வேலைக்கு செல்வதே சில நேரங்களில் பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், உலகமே உறங்கும் நேரத்தில் பணிக்கு செல்வதை பற்றி சொல்ல தேவையே இல்லை. அதிலும், சிலர் நிரந்தரமாகவும், சிலர் ரொடேஷன் முறையில் நைட் ஷிப்ட் வேலை செய்கிறார்கள்.

பொதுவாகவே, நைட் ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு அழையா விருந்தாளியாக உடல் பருமன், நிரிழிவு, இதய நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளும் வந்து விடுகிறது. ரொடேஷன் முறையில் வேலை செய்பவர்களை ஒப்பிடுகையில், நிரந்தரமாக நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கே உடல் உபாதைகள் அதிகம் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கூடுதலாக, இவர்களுக்கு ட்ரை கிளிசரைட் கொழுப்பு, ஆரம்பகட்ட சர்க்கரை நிலை, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருப்பதும், பெண்களுக்கு PCOD பிரச்சனை வருவதற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தீர்வு என்ன?:நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள், உண்ணும் உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, வேலைக்கு செல்லும் முன்னரே, அதாவது இரவு 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். புரதம் நிறைந்த உணவுகளை இரவு உணவாக சாப்பிட்டு செல்வதால் இரவில் வேலை பார்க்கும் போது உணவு தேவைப்படாது. முக்கியமாக, இரவு 12 மணியில் இருந்து காலை 6 மணி வரை எதுவும் சாப்பிடக்கூடாது என ஆய்வு எச்சரிக்கிறது.

பசித்தால் என்ன செய்வது?: 'அப்போ எனக்கும் பசிக்கும்லா' எனச் சொல்பவர்கள், இரவு உணவை சரியாக தேர்ந்தெடுத்து உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். இரவு 8 மணிக்குள் நாம் எடுத்துக்கொள்ளும் உணவே போதுமானதாக இருக்கிறது. அதையும் மீறி இரவில் பசி எடுத்தால் 10 மணியளவில் புரதம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

வேலை பார்க்கும் போது அடிக்கடி பசி எடுப்பது போல் தோன்றுவது இயல்புதான். ஆனால், அதுஉண்மையான பசி கிடையாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால், பசி எடுப்பது போல் உங்களுக்கு தோன்றினால் திசை திருப்ப முயற்சியுங்கள்.

புரதம் நிறைந்த உணவுகள்:

  • சுண்டல்
  • ஆம்லெட்
  • சிக்கன்
  • மீன்
  • பன்னீர் மற்றும் கூடுதலாக காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்.

அல்லது குறைந்த மாவுச்சத்து உணவுடன் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சப்பாத்தி மற்றும் ஒரு கப் சிக்கன், ஒரு தோசை மற்றும் ஒரு கப் சுண்டல், 2 இட்லி மற்றும் 2 முட்டைகளை எடுத்துக்கொள்ளலாம்.

மாவுச்சத்து கொண்ட உணவுகள் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் காலியாகி பசியெடுக்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால், புரதங்கள் நிறைந்த உணவுகள் நன்றாக பசியை கட்டுப்படுத்துகிறது. எனவே, இரவில் புரதம் மிகுந்த உணவு எடுத்துக்கொண்டால் நடு இரவில் பசி வராது.

நைட் ஷிப்ட் செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது:

  • இரவு 7-8 மணிக்குள் சாப்பிட வேண்டும்
  • இரவு உணவில் புரதங்கள் அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் இருப்பதை உறுதி செய்யவும்.
  • நடு இரவில் பசித்தால், வெள்ளரிக்காய், பழங்கள், கேரட், நட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடலாம். (குறிப்பு: சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால் பேரிச்சம்பழம், உலர் திராட்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்)
  • 12 மணிக்கு மேல் தண்ணீரை தவிர எதுவும் குடிக்கக் கூடாது. டீ, காபி குடிக்க தோன்றினால் சர்க்கரை இல்லாமல் பிளாக் டீ அல்லது காபி எடுத்துக்கொள்ளுங்கள்.

உடலில் நீர்ச்சத்து இருந்தாலே பசி எடுக்காது என்பதால் நைட் ஷிப்டில் இருப்பவர்கள் தண்ணீர் குடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஷிப்ட் முடிந்து காலையில் உறங்க செல்வதற்கு முன் உடலுக்கு தேவைப்படும் உணவை சாப்பிட்டு படுங்கள். இப்படி, செய்வதன் மூலம் நைட் ஷிப்டால் எந்தவொரு உடல்நல பிரச்சனையும் வராது.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

இதையும் படிங்க:

Last Updated : Sep 4, 2024, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details