சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் உரையற்றிய தமிழக முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது.
சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், இந்த மழை சில நாட்களிலேயே மொத்தமாகப் பெய்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். இதில் பொதுமக்களின் அவசியத் தேவையான குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆண்டும் பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் 14.9.2024 மற்றும் 21.9.2024 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர்களுடன் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி அலுவலர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: “இனி எந்நாளும் தமிழ்நாட்டை திமுக தான் ஆள வேண்டும்”- முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை!
சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையினால் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும். வானிலைத் தரவுகளை உடனுக்குடன் வழங்க கடந்த 22.08.2024 அன்று தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை நான் திறந்து வைத்தேன்.
இந்த அவசரகால வானிலை மையத்தில் பல்துறை வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்பக் குழு இயங்கி வருகிறது. பல துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், ஒருங்கிணைப்பு மையத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது.
மேலும் தற்போது 1400 தானியங்கி மழைமானிகளையும், 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம். இந்த செயலி மூலம் மக்களுக்கு உடனடி முன்னெச்சிரிக்கை தகவல் சென்றடையும்.
மேலும் தமிழ்நாடு அரசு TN-Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது. மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள். எனவே புயல், கன மழை குறித்த தகவல்களை அவர்களுக்கு தகவல் சென்றடையும். சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் இந்தக் காலக்கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும்.
முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுவது மிக அவசியம்.
வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் பொழுது தாழ்வான பகுதிகளிலிருந்து முன் கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல் வேண்டும். அந்த பகுதியில் இருக்கும் மக்களை வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். அவர்களுக்கு தேவையான தூய்மையான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம் உரிய நேரத்தில் உணவு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்த மூத்த அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்திருக்கிறோம். அவர்கள் மழைக்கு முன்னதாகவே தங்களது பணிகளை தொடங்கியாக வேண்டும். மேலும் இவர்கள் ஆண்டுதோறும் நாம் மேற்கொள்கின்ற தூர்வாரும் பணிகள், பாலங்கள், சிறுபாலங்களில் கழிவுகளை அகற்றுதல், அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகளை சரிசெய்தல் போன்றவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அதே போல் வெள்ள காலத்தில் மாணவர்கள் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று விளையாடுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இதனை உறுதி செய்ய முடியும்.
பேரிடர் மேலாண்மையில், தன்னார்வலர்களது பங்கும் மிகவும் அவசியமானதாகும். எனவே தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கென முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில், துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில் பாலாஜி, மா. சுப்பிரமணியன், பி.கே சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்