சென்னை: தமிழகத்தில் துறைமுகம் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சென்னை துறைமுகம் தான். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக எடுத்து செல்லப்படுகின்றன. சென்னையில் ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதற்கு மூலகாரணமாக சென்னை துறைமுகம் திகழ்ந்து வருகிறது. உணவுப்பொருட்கள் முதல் ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் வரை பாதுகாப்பாக கையாளப்படுகிறது. இப்படிப்பட்ட பரபரப்பான சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள லேப்டாப்களுடன் கண்டெய்னர் காணாமல் போனால் என்ன நடக்கும்.
இருக்கு ஆனா இல்ல!: கடந்த செப்டம்பர் 7ம் தேதியன்று சென்னை துறைமுகம் பரபரப்பானது இப்படிப்பட்ட ஒரு கடத்தலின் பின்னணியில் தான். கப்பலில் வந்து இறங்கிய கண்டெய்னர் ஆவணங்களின் படி துறைமுகத்தினுள் தான் இருக்கிறது. ஆனால் துறைமுகத்தில் கண்டெய்னர் இல்லை. விசித்திரமான இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணையைத் தொடங்கிய போதுதான் சினிமாவை மிஞ்சும் கடத்தல் சம்பவம் மெதுவாக வெளிச்சத்திற்கு வந்தது.
சென்னை துறைமுகத்துக்குள் இயங்கி வரும் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தான் இந்த குறிப்பட்ட கண்டெய்னரை கையாண்டிருக்கிறது. டெல் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்களை சீனாவில் இருந்து பெங்களூருக்கு எடுத்து செல்லும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக 5,230 லேப்டாப்கள் கடந்த 7ஆம் தேதியன்று சென்னை துறைமுக யார்டிற்கு வந்தடைந்தன. இதனை உறுதி செய்த அந்நிறுவனத்தின் மேலாளர் இசக்கியப்பன் கடந்த 11 ஆம் தேதி அதனை பெங்களூர் அனுப்புவதற்காக யார்டிற்கு சென்றபோது அங்கிருந்த கண்டெய்னர் கடத்தப்பட்டு இருந்தது.
விசாரணையைத் தொடங்கிய தனிப்படை: உடனடியாக சம்பவம் தொடர்பாக சென்னை துறைமுக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்து, கடத்தப்பட்ட கண்டெய்னரை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூக்கடை காவல்துறை துணை ஆணையாளர் சுந்தரவடிவேல் காவலர்களுக்கு உத்தரவிட்டார். உதவி ஆணையாளர் ராஜசேகர் பார்வையில் ஆய்வாளர் சிலம்பு செல்வன் தலைமையில் 15 காவலர்கள் அடங்கிய தனிப்படை விசாரணையைத் தொடங்கியது.
பொதுவாக துறைமுகம் வழியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறித்த ஆவணங்களும், ரகசிய குறியீட்டு எண்களும், இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கும், துறைமுக யார்டில் இருக்கும் கிளியரிங் ஏஜென்சிக்கும் தெரியப்படுத்தப்படும். எனவே இந்த ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்த யாரோ ஒருவர் தான் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை தாங்கள் உறுதி செய்ததாகக் கூறுகிறார் ஆய்வாளர் சிலம்பு செல்வன்.
உள்ளே வெளியே விளையாட்டு:திருப்பங்கள் நிறைந்த இந்த விசாரணை குறித்து ஈடிவி பாரத் செய்தியாளர் சதீஷ்குமாரிடம் அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் கட்டமாக சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் இளவரசன் என்ற இளைஞர் தலைமறைவான நிலையில், அவர் குறித்த விசாரணையை துரிதப்படுத்தியதாக ஆய்வாளர் கூறினார்.
நிறுவனத்தின் கணினியில் பதிவாகியிருந்த தகவல்களின் அடிப்படையில் கண்டெய்னரை வெளியே எடுத்துச் சென்றதாகவும். மீண்டும் உள்ளேயே கொண்டு வந்து வைத்து விட்டதாகவும் தகவல் பதிவாகியுள்ளது. ஆக ரெக்கார்டுகளின் அடிப்படையில் கண்டெய்னர் துறைமுகத்தினுள்ளேயே தான் இருக்கிறது. ஆனால் கண்டெய்னர் கடத்தப்பட்டு விட்டது என்பதை காவல்துறையினர் உணர்ந்தனர்.
சிக்கிய லாரி உரிமையாளர்!: இந்நிலையில் கண்டெய்னர் எடுத்து செல்ல பயன்படுத்திய லாரி யாருடையது என விசாரணையை முடுக்கினர். அந்த லாரி மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர் 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியாக ஆவணங்களை பயன்படுத்தி லாரியை துறைமுகத்திற்குள் கொண்டு வந்து வெளியே செல்ல பாஸ் வாங்கியதும் தெரிய வந்தது.
உடனடியாக அந்த மூடப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கண்டெய்னர் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லாரி உரிமையாளர் மணிகண்டன் மணலி நாப்பாளையம் பகுதியில் இருப்பதை அறிந்து அவரையும், லாரி ஓட்டுநர் பால்ராஜ் என்பவரையும் கைது செய்தோம். பின்னர் மணிகண்டன் மற்றும் பால்ராஜ் ஆகியோர் கடத்தலின்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து தங்களை வழி நடத்தியதாகவும், அந்த மோட்டார் சைக்கிள் எண்ணையும் தெரிவித்தனர்.
மாஸ்டர் பிளான்: அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து கடத்தலில் ஈடுபட்ட நெப்போலியன், ராஜேஷ், சிவபாலன், முத்துராஜை ஆகியோரை அடுத்தடுத்து கைது செய்ததாக ஆய்வாளர் கூறினார். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டோல்கேட் இருக்கும் வழியாக சென்றால் கண்டெய்னர் சிக்கி விடும் என்பதற்காக, டோல்கேட் இல்லாத பகுதியில் கண்டெய்னருடன் லாரியை கொண்டு சென்று திருவள்ளூர் மணவாளன் நகர் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.
இதற்கிடையில் லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவியும், கண்டெய்னரில் கம்ப்யூட்டரில் பொறுத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியும் செயலிழக்கச் செய்யப்பட்டன. இதற்கிடையில் திருவள்ளூர் மணவாளன் நகர் பகுதியல் சிலர் 40 கண்டெய்னரை கொண்டு வந்து அதில் இருந்த பொருட்களை சிறிய வகை லாரிகளில் மாற்றியதும், அவ்வாறு மாற்றப்பட்ட 2 சிறிய வகை லாரிகளும் அதே பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடத்தல் சரக்கு விற்பனைக்குத் தயார்: அதில், கடத்தப்பட்ட கண்டெய்னரை இப்பகுதிக்கு கொண்டு வந்து அதனை இரு லாரிகளில் பிரித்து வைத்து மும்பைக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் இருந்ததும், மேலும் அதில் இருந்து சில லேப்டாப்களை விற்பனை மார்க்கெட்டிங்குக்காக முக்கிய குற்றவாளி இளவரசன் எடுத்து சென்றிருப்பதும் தெரிய வந்தது.
உடனடியாக அங்கிருந்த சுமார் ரூ.35 கோடி மதிப்புள்ள 5,207 லேப்டாப்களையும், கண்டெய்னரை கடத்தி வர பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தோம். மீட்கப்பட்டதில் ஒரு லேப்டாப்பின் விலை ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் வரை இருக்கும் என தெரிந்தது. அதனை அடுத்து, லேப்டாப்கள் இருந்த கண்டெய்னர் எங்குள்ளது என விசாரணை செய்தபோது, அதனையும் போலி ஆவணம் பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிக்கு எடுத்து சென்று அங்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினோம் என ஆய்வாளர் சிலம்புச் செல்வன் கூறினார்.
வாடகை லாரி கிடைத்தது எப்படி?: கடத்தலுக்காக லாரி வாடகைக்கு எடுத்ததே ஒரு கிரைம் த்ரில்லர் கதையை மிஞ்சும் வகையில் உள்ளது. போலீஸ் தரப்பில் ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்ட தகவல்களின் படி," கண்டெய்னரில் லேப்டாப்கள் வருவதையறிந்த இளவரசன் அதனை கடத்த திட்டமிட்டு, தனது நண்பரான நெப்போலியனிடம் லாரி வாடகைக்கு வேண்டும் என கேட்டுள்ளார்.
நெப்போலியன் தன்னிடம் லாரி இல்லாததால் தனது நண்பர்களான ராஜேஷ் மற்றும் சிவபாலனை தொடர்பு கொண்டு லாரி கேட்டுள்ளார். ராஜேசும் இதுதொடர்பாக முத்துராஜை தொடர்பு கொண்டு லாரி கேட்டுள்ளார். கண்டெய்னரை கடத்துவதற்கு தான் லாரி பயன்படுத்தப்பட உள்ளது என்பதை அறிந்த முத்துராஜ் லாரி உரிமையாளரான மணிகண்டன் மற்றும் ஓட்டுநரான பால்ராஜ் ஆகியோரை தொடர்புகொண்டு லாரியை வாடகைக்கு எடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்து லாரியை துறைமுகத்திற்குள் அனுப்பி அதில் கண்டெய்னரை ஏற்றி வெளியே கடத்தி வந்ததும் தெரிய வந்தது".
சிறு தாமதம் இருந்திருந்தால் கூட லேப்டாப்கள் இருந்த 2 லாரிகளும் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு லேப்டாப்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கும் என தனிப்படை அதிகாரி சிலம்பு செல்வன் தெரிவித்தார். மேலும், சென்னையில் ஒரு ஆண்டில் நடைபெறும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் மீட்கப்படும் பொருட்களின் மதிப்பை, தாங்கள் ஒரே திருட்டில் துரிதமாக செயல்பட்டு மீட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
போலி ஆவணங்கள் மூலம் பாஸ் வாங்கி, யார்டு கம்ப்யூட்டரில் கண்டெய்னர் இருப்பது போன்ற பதிவை மோசடியாக பதிவு செய்து, டோல்கேட் இல்லாத சாலையை தேர்வு செய்து கண்டெய்னருடன் லாரியை இயக்கி, ரூ.35 கோடி மதிப்பிலான லேப்டாப்கள் இருந்த கண்டெய்னரை கடத்தி மும்பைக்கு கொண்டு செல்ல இருந்த கடத்தல்காரர்களின் மாஸ்டர் பிளானை தமிழக தனிப்படை கடைசி நேரத்தில் தவிடுபொடி ஆக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.