சென்னை:இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் குரங்கம்மை பாதிப்பு இல்லை எனவும், யாருக்கேனும் குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை தொற்று நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மை தொடர்பாக நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். 116 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். விழிப்புணர்வு வாசகம் அடங்கிய விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. உலகளவில் குரங்கம்மை தொற்றினால் 223 இறப்புகள் பதிவாகி உள்ளது. தற்போது வரை இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் குரங்கம்மை பாதிப்பு இல்லை. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பாதிப்புகளுடன் இருப்பவர்களுக்கு நெகட்டிவ் பிரசர் வார்டு என்ற சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளின் மூச்சுக்காற்றின் மூலம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கப்படும். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 200 மருத்துவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. பெரியம்மையின் தொடர்ச்சி தான் இந்த வகை பாதிப்பு. ஆகையால், அதற்கான சிகிச்சை முறைகளே இதற்கும் நடைமுறையில் உள்ளது.
மேலும், டெங்கு பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக வரும் 2ஆம் தேதி மாவட்ட அளவில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனைக் கூட்டம், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள டெங்கு நோயாளிகளையும் கண்காணிக்கக் கூறியுள்ளோம்.
அடுத்து வரும் மூன்று மாதங்கள் டெங்கு பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. பருவமழை காரணமாக அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். நகராட்சி, ஊராட்சி அமைப்புகளுடன் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 65 என்று இருந்த டெங்கு உயிரிழப்பு, கடந்த 4 ஆண்டுகளாக 8 முதல் 10 ஆக உள்ளது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு உயிரிழப்பு மிக மிகக் குறைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், குரங்கம்மை தொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், குரங்கம்மையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.
குரங்கம்மை என்றால் என்ன?குரங்கம்மை நோய் என்பது வைரஸ் கிருமியால் வரும் நோய். இந்த தொற்று முதன்முதலில் 1958ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குரங்கம்மை நோய், ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவித்தது.