சென்னை: தானத்தில் சிறந்த தானம் கண் தானம் (Eye Donation) என்று பலமுறை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தினமும் எத்தனையோ சடலங்கள் கண்களோடும், கருவிழிகளோடும் புதைக்கவோ, எரிக்கவோ படுகின்றன. கண் தானம் யாரெல்லாம் செய்யலாம்? யாரெல்லாம் செய்யக்கூடாது? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் அதற்கான பதிலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..
கண் தானம் பற்றிய கட்டுக்கதைகள்:
- உயிரோடு இருக்கும் போதே கண்கள் அகற்றப்படுகிறது
- முழு கண்களையும் நீக்கி விடுவார்கள்
- கண் மருத்துவமனையில் மட்டும் தான் கண்களை அகற்றுவார்கள்
- மதத்தில் அனுமதிக்கப்படுவதில்லை
- இறுதிச் சடங்கு தாமதமாகும்
- வயதானவர்கள் உயிரிழந்தால் அவர்களது கண்கள் பயன்படுத்த முடியாது
- கண்ணாடி உபயோகிப்பவர்கள், கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களின் கண்கள் பயன்படாது
- கண் தானம் கொடுத்தவர்கள் அடுத்த பிறவியில் கண் பார்வை தெரியாதவராகப் பிறப்பார்கள்
கண் தானம் செய்ய முடியாதவர்கள் யார்? :
- இறப்பிற்கான காரணம் தெரியாமல் உயிரிழந்தவர்களின் கண்கள் சேகரிக்கப்படுவதில்லை.
- கண் தொற்று அல்லது கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண் தானம் செய்யமுடியாது
வாழ்நாளில் பின்வரும் நோய்களை கொண்டவர்களின் கண்கள் சேகரிக்கப்படுவதில்லை
- எய்ட்ஸ் எச்.ஐ.வி/ஹெபடைடிஸ் பி அல்லது சி
- செப்சிஸ்
- ரேபிஸ்
- லுகேமியா
கண் தானம் பற்றிய உண்மைகள்:
- ஒரு நபர் இறந்த பின்னர் மட்டுமே கண்கள் அகற்றப்படுகிறது
- அனைத்து மதத்தினரும் ஆதரிக்கின்றனர்
- இறந்த 6-8 மணி நேரத்திற்குள் அல்லது 12-24 மணி நேரத்திற்குள் (உடல் குளிரூட்டப்பட்டிருந்தால்) அகற்றப்படும்
- கண் மருத்துவர் அல்லது பயிற்சி பெற்ற நிபுணரால் மட்டுமே அகற்ற முடியும்
- நன்கொடையாளர்கள் இறந்த இடத்திலேயே கார்னியா அகற்றப்படுகிறது (மருத்துவமனை அல்லது வீட்டில்)
- கார்னியாவை அகற்ற 15-20 நிமிடங்கள் மட்டுமே எடுப்பதால் இறுதிச் சடங்கில் தாமதம் ஏற்படாது
- முகத்தில் எந்த விதமான சிதைவையும் ஏற்படுத்தாது
- நன்கொடையாளர் மற்றும் பெறுநரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படுகிறது