ஹைதராபாத்:உடல் எடை அதிகரித்தாலே முதலில் வெளிச்சத்திற்கு வருவது தொப்பை தான். தொப்பை வெளியே தெரிய ஆரம்பித்த பின்னர் தான் உடல் பருமனாக இருக்கிறோம் என்ற உணர்வே நினைவுக்கு எட்டுகிறது. அதற்குப் பிறகு தான் அதை மறைக்கவும் குறைக்கவும் வழிகளைத் தேடுகிறோம்.
உடல் எடையை விட தொப்பையை குறைப்பது பெரும் பாடாக இருக்கிறது என பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். டயட், ஜிம், பூங்காவில் மணிக்கணக்கில் ஓடினாலும் தொப்பை குறைந்தபாடில்லை என தொடர்ந்து ஒரு புறம் மக்கள் வேதனையை சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், உணவுமுறையை தவிர, தொப்பை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
உடற்பயிற்சியின்மை: நவீன உலகத்தை நோக்கி செல்லும் நமக்கு தினமும் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை என்கின்றனர் பலர். ஆனால், தினமும் காலை ஒரு மணி நடைப்பயிற்சிக்காக உங்கள் வாழ்க்கையில் நேரம் ஒதுக்குவதால் தொப்பையை சுற்றியுள்ள கொழுப்பு கரைவது மட்டுமல்லாமல் முதுமையில் உடல் வலிமையாக இருக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவு: ஆசையாக இருக்கிறது என பசி இல்லாத போதும் நாம் சாப்பிடும் உணவு உடலுக்கு ஆரோக்கியமற்ற உணவாக தான் செல்கிறது. இதன் விளைவுதான் வயிற்றைச் சுற்றி கொழுப்பாக மாறி தொப்பை போடுகிறது. பலர், தங்கள் உடலுக்குத் தேவையானதை விட அதிக கலோரிகளைக் சாப்பிடுகிறார்கள். இதனால் அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
மது அருந்துதல்: மது குடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே தொப்பை வெளியே தெரிவதை நம்மால் பார்க்க முடியும். இதற்கு காரணம் மதுவில் உள்ள கலோரிகள். இது தவிர பலர் மது சாப்பிடும் போது அசைவ உணவுகளை சைட் டிஷ்ஷாக உண்கின்றனர். இதனால், இரண்டும் சேர்ந்து அடிவயிற்றில் கொழுப்பாக உருவெடுக்கிறது.