ஐதராபாத்:காய்கறி சந்தையிலிருந்து நாம் பல விதமான காய்கறிகளை வாங்கினாலும் கடைசியாக 'கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி கொடுங்க' என கேட்டு வாங்கி வருவது பலருக்கும் மன திருப்தியை தருகிறது. அப்படி, நாம் ஆசையாக வாங்கி வரும் கொத்தமல்லியை தினமும் செய்யும் உணவில் சேர்க்க வேண்டும் என நினைக்கும் போது, சில நேரங்களில் வாங்கி வந்தே அன்றே கெட்டுவிடுகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு இருக்கா என்றால் இருக்கிறது. நாம் செய்யும் சில தவறுகளை மாற்றுவதன் மூலம் இரு வாரங்கள் வரை கொத்தமல்லியை கெட்டுப்போகாமல் பயன்படுத்த முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கொத்தமல்லியை கழுவுவதில் கவனம் தேவை:கடையிலிருந்து கொத்தமல்லியை வாங்கி வந்தவுடன் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைத்து அதனை கழுவி நாம் ஸ்டோர் செய்வதுண்டு. இதனால், கொத்தமல்லி சில மணி நேரங்களிலே கெட்டு விடுகிறது. காரணம், கொத்தமல்லி கழுவிய உடனேயே பயன்படுத்தக்கூடிய மூலிகை.
அதனால், கழுவிய பிறகு ஸ்டோர் செய்தால் அது கெட்டுவிடும். இதற்கு தீர்வு என்னவென்றால், கொத்தமல்லியை உபயோகிக்கும் முன்னர் கழுவி பயன்படுத்த வேண்டும்.
கொத்தமல்லி தண்டுகளை தண்ணீரில் வையுங்கள்: ஒரு டம்ளரில் தண்ணீர் நிரப்பி, கொத்தமல்லியின் தண்டு தண்ணீரில் படும்படி வைக்க வேண்டும். இப்படி, செய்வதால் கொத்தமல்லி காய்ந்து போகாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. குறிப்பு: இந்த தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்.