சென்னை: ஆண்டுதோறும் ஜூன் மாதம் கண்புரை விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்துப் பேசியுள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின், மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் சௌந்தரி, உலகளவில் கண்புரை நோயால் சுமார் 18 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளின் பார்வைத்திறன் இழப்பிற்கு கண்புரை நோய் முக்கிய காரணமாக இருக்கிறது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் உலக அளவில் கண்புரைக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து அறுவை சிகிச்சைகளிலும் 20 சதவீதம் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செய்யப்படுகின்றன என தெரிவித்த மருத்துவர் சௌந்தரி, கண்களின் இயற்கையான லென்ஸ்கள் மீது மேக மூட்டம் போன்ற மங்கும் தோற்றம் ஏற்படும்போது கண்புரை நோய் வருகிறது எனவும், இது குறைந்து கொண்டு போகும் பார்வைத்திறனுக்கு வழிவகை செய்யும் எனவும் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், லென்ஸ்களில் புரதச்சிதைவின் காரணமாக, மங்கலான பார்வையும், நிறங்களை அடையாளம் காண்பதில் சிரமமும் மற்றும் இரவு நேரத்தில் சரியாக பார்வை தெரியாத நிலையும் ஏற்படும். வயது முதிர்ச்சியடையும்போது நமது கண்களின் லென்ஸ்களில் உள்ள புரதம் சிதைவுறத் தொடங்கும் எனவும், வயதான முதியவர்கள், அதுவும் குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள், குறித்த கால அளவுகளில் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
மேலும், வயது முதிர்ச்சியின் காரணமாக, கண்புரை ஏற்படுவது மிகப்பொதுவானது என்ற போதிலும், புற ஊதாக்கதிர்கள், உடலில் நீர்ச்சத்து இழப்பு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, புகைபிடித்தல், கண்ணில் காயம், நீரிழிவு மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் போன்ற மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றிற்கு வெளிப்படுதல் இருக்குமானால், எந்த வயதுப்பிரிவைச் சேர்ந்த நபருக்கும் கண்புரை பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.