ஹைதராபாத்: வீட்டில் இருப்பவர்கள் என்னவோ, இருவரோ மூவரோ தான், ஆனால் அவர்களது சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்களை வைத்து ஒரு ஊருக்கே சமைத்து விடலாம் என்று தோன்றும். இப்படி, உலகத்தில் உள்ள எந்த சமையலறைக்கு சென்றாலும் வித விதமான, வகை வகையான பாத்திரங்களை நம்மால் பார்க்க முடியும்.
எப்பொழுதும் தேவைக்கு அதிகமாக தான் அனைவரது வீட்டிலும் பாத்திரங்களை வைத்திருப்போம். ஆனால், இவையெல்லாம் ஒரே நாளில் வாங்கியதாக கண்டிப்பாக இருக்காது. காலம் காலமாக, ஏன் தலைமுறை தலைமுறையாக சில பாத்திரங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். இப்படியான பாத்திரங்கள் சில நேரங்களில் துருப்பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. அதனை தடுப்பது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
பாத்திரங்களை உலர வைக்கவும்:இரும்பு பாத்திரங்கள் அல்லது கடாய்களை உலர்ந்த இடத்தில் வைப்பது மிகவும் அவசியம். சமைத்து விட்டு பாத்திரங்களை கழுவிய பின்னர், உலர்ந்த துணியால் ஈரப்பதம் இல்லாமல் நன்றாக துடைக்கவும்.
அல்லது சூடான அடுப்பில் பாத்திரத்தை சில நிமிடங்கள் உலர வைக்கவும். அதன் பிறகு அவற்றின் மீது எண்ணெய் தடவி ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்கவும். இப்படி, செய்வதால் பாத்திரங்கள் பல வருடங்களுக்கு துருப்பிடிக்காமல் இருக்கிறது.
சிலிக்கா ஜெல் பேக்குகள்: நாம் ஏதேனும் புதுப்பொருட்கள் வாங்கினால் அதனுள் சின்னதாக ஒரு பாக்கெட் வைத்திருப்பார்கள். அதன் பயன்பாடு தெரியாமல், பல நேரங்களில் அதனை தூக்கி எறிந்து விடுகிறோம். அது தான் சிலிக்கா ஜெல் பேக்கெட், இவை உலர்விப்பானாக செயல்படுகிறது.
சமையலறையில் உள்ள ரேக்குகளில் தட்டுகள், கரண்டிகள் என கழுவிய பாத்திரத்தை அப்படியே ஒன்றாக போட்டு விடுகிறோம். இது காலப்போக்கில் பாத்திரங்கள் துருப்பிடிக்க வழிவகுக்கிறது. இப்படியான சூழல் மற்றும் மழைக்காலத்தில் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை ரேக்குகளில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதால் ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை எப்பொழுதும் ப்ரஷ்ஷாக வைத்திருக்கிறது.
இடம் சரிபார்க்கவும்: சிலர் இரும்புக் கடாய் மற்றும் தோசைப் பாத்திரங்களை உபயோகித்த பிறகு ஈரமான இடத்தில் வைப்பார்கள். இதனால், துருப்பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, அவற்றை தனியாக உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். மேலும், பாத்திரத்தை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த மாட்டீர்கள் என்றால் பாத்திரத்தில் எண்ணெய் தடவி தனியாக வைத்து விடுங்கள்.
எலுமிச்சை, பேக்கிங் சோடா: நாம் என்ன தான் பாத்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சி செய்தாலும் சில சமயங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்களை தாண்டி துருப்பிடித்துவிடுகிறது. இந்த சூழலில், ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு எலுமிச்சை சாற்றை பாத்திரத்தில் போட்டு நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
நன்றாக தேய்த்த பின் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் கவரில் பேக் செய்து வைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால் துருப்பிடிப்பு மறைவதுடன் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியதாக இருக்கிறது.
துருப்பிடிக்காமல் பாதுகாப்பது எப்படி?:
- முடிந்தவரை பாத்திரங்களை சுத்தம் செய்ய பின்னர் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
- பாத்திரங்களை கழுவிய பின், உலர்ந்த துணியால் துடைத்து ஒரு ஸ்டாண்டில் வைக்கவும். பாத்திரங்களை ஈரப்பதத்துடன் விடுவது துருப்பிடிக்க வழிவகுக்கும்.
- மேலும், வீட்டில் பல நாட்களாக பயன்படுத்தாமல் பாத்திரங்கள் இருந்தால், மழைக்காலத்தில் அவற்றை வெளியே எடுத்து சரிபார்க்கவும்.
இதையும் படிங்க:இட்லி/தோசை மாவு புளித்து விட்டதா? இதை கொஞ்சம் கலந்து பாருங்க..சக்சஸ் தான்!