சென்னை: உங்களை நீங்களே நேசிப்பதுதான் உங்கள் மீது நீங்கள் காமிக்கும் அதிகப்படியான இரக்கம் என உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர். பலர் தங்களை தாங்களே வெறுத்து மன உளைச்சல்களுக்கு ஆளாகும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனக்கூறும் உளவியல் ஆலோசகர்கள், அவசர உலகில் அன்பும், அக்கரையும் கூட உங்களுக்கு நீங்களே அவசர அவசரமாக காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரை சென்றுவிடும் அபத்தங்களும் நடக்கின்றன. இதற்கு முற்று புள்ளி வைக்க உங்களை நீங்கள் வெறுப்பதை தவிர்த்து உங்களை நீங்களே பாராட்டவும் நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் என உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர். அதற்கு எந்தமாதிரியான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.
உங்கள் மீது நீங்களே தவரான முத்திரை குத்திக்கொள்ள வேண்டாம்: அப்படி நீங்கள் நினைக்கும் பொழுது உங்கள் ஆற்றல் அதற்கு ஏற்றார்போல் செயல்பட்டு உங்களின் ஒட்டுமொத்த ஆளுமையையும் பறிபோகும் நிலை ஏற்படும். அதாவது,
- நான் கோவக்காரன்
- என்னால் இது முடியாது
- எனக்கு மற்றவர்கள் அளவுக்கு அறிவு இல்லை
- என்னை யாருக்கும் பிடிக்காது
- எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது
போன்ற எந்த எதிர்மறையான சிந்தனைகளுக்கும் உங்கள் மனதில் இடம் கொடுக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.
தவறுகளை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்:தவறுகளில் இருந்து தான் சரி எது என்பதை கற்றுக்கொள்ள முடியும் என பல வல்லுநர்களும், எழுத்தாளர்களும் சொல்லிக்கேட்டிருப்போம், அதுதான் இங்கேயும். இந்த உலகத்தில் பிறந்து மறைந்த மிகப்பெரிய ஆளுமைகள் கூட பல தவறுகளை செய்தவர்களாகத்தான் இருப்பார்கள். நீங்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் தவறைக் கொண்டு உங்கள் தன்மையை வரையறுக்காத வரை, தவறு உங்கள் குணத்தை ஒருபோதும் வரையறுக்காது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அதை கடந்து செல்ல வேண்டும். அதில் இருந்து முன்னேற்றம் காண பயணிக்க வேண்டும். அனைத்து சூழல்களிலும் உங்களை நீங்களே நம்ப வேண்டும் எனவும் உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
விமர்சனம் செய்வதை நிறுத்திவிடுங்கள்:விமர்சனம் அது வடிவத்திலானாலும் அதை நிறுத்தி விடுங்கள். உங்களை நீங்களே விமர்சனம் செய்வதும் வேண்டாம். பிரறை விமர்சிக்கவும் வேண்டாம். இங்கு நீங்கள் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை பற்றி நாம் இங்கு பேசவில்லை.. எதிர்மறையான விமர்சனங்களை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். அடுத்தவர்களை நீங்கள் விமர்சனம் செய்யும்போது அவர்களை விட நீங்கள் மெச்சப்பட்டவர்கள் என்ற அர்த்தம் விளைகிறது. அதை தவிர்த்துவிட்டு உங்களை நீங்கள் சரியாக வைத்துக்கொண்டாலே போதுமானது.
உங்களிடம் உள்ள குறைகள் கூட அழகானவை என்று நம்புங்கள்:குறைபாடு உங்களிடம் மட்டும் உள்ளது அல்ல.. சிறு புல் முதல் பெரும் மலைகள் வரை இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்திலும் குறைபாடுகள் இருக்கின்றன. இதுதான் இயற்கை.. அப்படி இருக்கையில் மனிதர்களான நம்மிடமும் குறைகள் இருப்பது சாதாரணமான ஒன்றுதான் என நம்புங்கள். வாழ்க்கையில் இது இருந்தாக வேண்டும், வெற்றி கிடைத்தே ஆக வேண்டும்.. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என எதையும் சிந்திக்க வேண்டாம்.
வாழ்க்கை வாழ்ந்து செல்வதற்கான ஒன்று மட்டுமே.. பயணம் மட்டுமே இதன் ஸ்வாரஸ்யம். இந்த பயணத்தில் நீங்கள் எதை கற்றுக்கொள்கிறீர்கள், உங்களை எப்படி சிறந்த ஆளுமையாக மாற்றுகிறீர்கள், மகிழ்ச்சியை எப்படி தக்க வைக்கிறீர்கள் என்பதுதான் விஷயம். நாம் நம்மை நேசிப்பதிலும், நமக்கு நாமே அக்கரை செலுத்திக்கொள்வதிலும் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.
இதையும் படிங்க:ஓடி விளையாடு பாப்பா! அதில் அறிவியலும் அறிந்து கொள் பாப்பா! - UNICEF சொல்லும் ரகசியம் - UNICEF ON SCIENCE IN CHILDREN GAMES