ஐதராபாத்:செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மாற்றாக வந்த சமூக வலைதளங்கள் தற்போது உலகையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் கோலோச்சி வருகின்றன. 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூடியூப் தற்போது உலகின் அதிகபட்ச பார்வையாளர்களை கொண்ட தளமாக இயங்கி வருகிறது.
ஒவ்வொரு மாதமும் யூடியூபை 200 கோடி பேர் பார்வையிடுவதாக அறிக்கை கூறுகிறது. இது இணையதளத்தில் உள்ள மொத்த பயனர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். சமூக வலைதளங்களில் யூடியூப் என்பது பிரதான பயன்பாடாக இருக்கிறது. ஒரு விஷயம் அச்சு பத்திரிகை அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதை விட யூடியூப் போன்ற சமூகவலைதளங்களில் பதிவிட்டால் அதிக பார்வையாளர்களை சென்றடையும் என்ற நம்பிக்கை தற்போது வந்துவிட்டது.
அதை வைத்து யூடியூப் சேனல் தொடங்கி பணம் ஈட்டி பிரபலமடைந்தவர்கள் ஏராளம். கரோனாவுக்கு பின்னர் யூடியூப் சேனல் தொடங்குவோரின் எண்ணிக்கை என்பது உச்சத்தை தொட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணகான யூடியூப் சேனல்கள் தொடங்கப்படுகின்றன. ஆனால் குறிப்பிட்ட சேனல்கள் மட்டுமே மக்கள் பார்வையை ஈர்த்து அதிக பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்களை திரட்டுகிறது.
அதையே நாம் பிராண்ட் பில்டிங் என்று கூறுகிறோம், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், கார்கள், காஸ்மட்டிங் பொருட்களில் எப்படி பிராண்ட் பார்த்து நாம் வாங்குகிறமோ அதைப் போலத் தான் யூடியூபிலிம் பிராண்ட் பில்டிங் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததகா பார்க்கப்படுகிறது.
பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு என்ன?:
யூடியூப்புக்கு எல்லைகள் என்பது கிடையாது. அதனால் நீங்கள் சாதாரண கிராமத்தில் இருந்தும் கொண்டு அனைத்து வசதிகளும் கொண்ட நகரத்தில் வசிக்கும் நபரை உங்களை பின் தொடர்பவராக்க முடியும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் வீடியோக்களை பதிவிடும் பட்சத்தில் தானாக உங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொடும்.
யூடியூபில் பணம் சம்பாதிப்பது எப்படி?:
கூகுள் நிர்ணயித்த அளவை காட்டிலும் உங்களது வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தானாக பணம் வரத் தொடங்கிவிடும். மேலும் உங்கள் வீடியோக்களில் விளம்பரங்களை போடுவது, குறிப்பிட்ட பொருட்களை விற்பனை செயவது சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பது உள்ளிட்டவைகளின் மூலம் நீங்கள் படிப்படியாக யூடியூபில் பணம் ஈட்ட முடியும்.
எப்படி யூடியூப் சேனலை வெற்றிகரமாக நடத்துவது?
தகவல் பகிர்வு: உங்களுக்கு தெரிந்த தகவல் அல்லது அறிவு சார்ந்த விஷயங்களை மற்றவர்களுக்கு வீடியோ மூலம் தெரியப்படுத்துவதன் மூலம் உங்களுக்கு என குறிப்பிட்ட பார்வையாளர்களை உருவாக்க முடியும். பெரும்பாலும் பொழுதுபோக்கு இணையாக அறிவு அல்லது தகவல் சார்ந்த வீடியோக்கள் யூடியூபில் அதிகளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்து பயணிப்பது:
யூடியூபில் வேகமாக வளர வேண்டும் என விரும்புபவர்கள், குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்து அது தொடர்பாக புதிய தகவல்களை வீடியோவாக பதிவிடுவது அவர்களை வேகமாக பொது மக்களை சென்றடைய செய்ய உதவுகிறது. உதாரணத்திற்கு உணவு சார்ந்த வீடியோக்கள், அறிவியல் சார்ந்த செயல்முறைகள், காமெடி சேனல்கள் அதிகளவில் பொது மக்களால் பார்க்கப்படுகின்றன.