சென்னை:குழந்தைகள் விளையாடுவது என்பது வெறும் மகிழ்ச்சிக்காக மட்டும் அல்ல, அவர்களின் அறிவை வளர்க்கும் செயல்களில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குழந்தை பிறந்து முதல் 3 ஆண்டுகளில் அதாவது ஒரு வயது முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை திறன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் அவர்களின் அறிவு திறனை வளர்க்க பெற்றோர் அதிகம் பாடுபட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் இங்கு வேடிக்கையான விஷயம். குழந்தைகளை விளையாட அனுமதித்தல் மற்றும் அவர்களோடு சேர்ந்து விளையாடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டாலே போதும் அவர்கள் அறிவாற்றல் பல மடங்கு வளர்ச்சி பெறும் என யூனிசெஃப் பேரன்டிங் வழிகாட்டுதல் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் சிறிய விளையாட்டுகளை மேற்கொள்வதை பார்க்கும்போது அது மேலோட்டமாக தெரியலாம் எனவும், ஆனால் அது அவர்களின் வாழ்க்கை திறன், சிக்கல்களை சமாளிப்பது, புதிய சூழலை எளிதாக கையாளுவது உள்ளிட்ட பல்வேறு ஆற்றலை கற்றுக்கொடுக்கும்.
குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி இருக்க வேண்டும்: உங்கள் குழந்தைக்கு முதல் ஆசிரியரும் நீங்கள் தான், முதல் நண்பரும் நீங்கள்தான். அவர்களோடு விளையாடும் நண்பராக இருந்துகொண்டே ஆசிரியர்போல் பாடமும் கற்றுக்கொடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என யூனிசெஃப் அறிவுறுத்துகிறது.