சென்னை:வாரத்திற்கு மூன்று முறை சுடு தண்ணீரிலும், நான்கு முறை குளிர் நீரிலும் குளிப்பதால் உடல் பல பலன்களைப் பெறுவதாக மார்னிங் சைன் அவுட் என்ற தனியார் வலைத்தளப் பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. கோடை காலம் முடிந்து மழைக்காலம், குளிர்காலம் வந்தாலும், சிலருக்கு குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது தான் திருப்தியாக இருக்கும்.
அதேபோல, சிலர் எந்த சீசனாக இருந்தாலும் சரி சுடுநீரில் குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி இருக்க, குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது நல்லதா? அல்லது சுடு தண்ணீரில் குளிப்பது நல்லதா? என்ற குழப்பமும் பலர் மத்தியில் சுற்றித் திரியும்.
சுடு தண்ணீரில் குளிப்பதன் நன்மைகள்:தசை விறைப்பு அல்லது பதற்றமான மனநிலை இருக்கும் சூழ்நிலையில், வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது. ஏனெனில், இது உடலில் உள்ள இறுக்கமான தசைகளைத் தளர்த்தி அமைதியாக்கும். நோய்வாய்ப்பட்டிருக்கும் போது வெந்நீரில் குளிப்பது மருத்துவ முறையாக மாறுகிறது.
குறிப்பாக, வெந்நீர் உண்மையில் தோல் துளைகளைத் திறந்து அழுக்கு மற்றும் எண்ணெய்யை அகற்றுவதை எளிதாக்குகிறது. வெந்நீரில் இருந்து வரும் வெப்பத்தால் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோனை மூளை வெளியேற்றுகிறது. இதனால் மன அழுத்தம் நீங்குவதோடு. சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடைகிறது.
தீமைகள்: சூடுநீரில் குளிப்பது அதிக தீமைகள் உள்ளன. தோலின் மேலடுக்கில் ஈரப்பதம் மற்றும் கெரட்டின் செல்களைத் தக்கவைக்க உதவும் சரும அடுக்கை முற்றிலுமாக சேதப்படுத்துகிறது. குறிப்பாக, முடி மற்றும் தோல் சருமத்தை வறட்சியாக மாற்றுகிறது.