சென்னை: 2கே-வில் வந்த புதுப்பழக்கம் இல்லை. 80களுக்கு முன்பிலிருந்தே உள்ள பழக்கம். வீட்டிற்கு வந்த விருந்தினர்களிடம் “ஒரு கப்பு காபி குடிக்கிறீர்களா?” என்று கேட்பது. உபசரிப்பின் பானமாக, புத்துணர்ச்சி பானமாக குடிக்க ஆரம்பித்த காபி, தற்போது அன்றாட வாழ்வில் ஒன்றி விட்டது.
மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் தாண்டி, இப்போது காபிக்கு அடிமையானவர்களை கூட பார்க்க முடிகிறது. பலரது இன்ஸ்டா பயோவிலும், காபி அடிக்ட் என்று எழுதி இருப்பதையும் பார்க்க முடிகிறது. இன்ஸ்டண்ட் காபி, பில்டர் காபி, கோல்ட் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ், கஃபன் நீக்கப்பட்டது என வகைகள் உள்ள காபி உருவான கதையை தான் இத்தொகுப்பில் பார்க்க போகிறோம்.
14ஆம் நூற்றாண்டில் ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில் கல்டி என்ற ஆடு மேய்ப்பவர் தான் காபியை கண்டறிந்தார். இவர் ஒரு இடத்தில் ஆடு மேய்க்க சென்ற போது, அவருடைய ஆடுகள் அந்த வழியே இருந்த இலை, தழைகளுடன் பெர்ரி செடிகளின் விதைகளையும் சேர்த்து மேய்ந்தன. பின்னர் மேய்ச்சல் முடிந்த ஆடுகளை கல்டி பண்ணைக்கு அழைத்து சென்றார். இரவு நேரம் ஆனதும் எந்த ஆடுகளும் தூங்கவில்லை.
அனைத்து ஆடுகளும் உற்சாகமாக கத்திக்கொண்டு அங்குமிங்கும் உலவிக்கொண்டு இருந்தன. இதனை கவனித்த கல்டி, ஆடுகள் பெர்ரி விதைகளை சாப்பிட்ட பின்புதான் இவ்வாறு இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டார். கல்டி அந்த விதைகளை சேகரித்து, அந்த ஊரில் உள்ள பாதிரியாரிடம் காண்பித்து நடந்ததை கூறினார். அந்த பாதிரியாரும் இந்த விதைகளை வாங்கிக்கொண்டு ஒரு பானம் தயாரிக்கிறார். அந்த பானத்தை குடித்துவிட்டு இரவு முழுவதும் உற்சாகமாக பிராத்தனை செய்தார்.
இந்த பானத்தை சோதித்த பின்னர், இவருக்கு தொடர்புடைய பாதிரியார்களுக்கும் அனுப்பி வைத்தார். இந்த விதைகள் அப்படியே ஒவ்வொரு நாடுகளாக பரவ ஆரம்பித்தது. முக்கியமாக எத்தியோப்பியாவிற்கு கிழக்கு திசையில் உள்ள நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. 15ஆம் நூற்றாண்டில் அரேபியா மற்றும் ஏமன் போன்ற நாடுகளில் இந்த காபி செடியை வளர்க்க ஆரம்பித்தனர். பின்னர், 16ஆம் நூற்றாண்டில் சீரியா, துருக்கி, பெர்சியா போன்ற நாடுகளிலும் வளர்க்க ஆரம்பித்தனர்.
பாதிரியார் தயாரித்த காபியை ஒவ்வொரு இடங்களாக கடைகள் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தனர். அந்த கடையானது ஒரு பொதுவான இடமாகவும் நிறைய நபர்கள் வந்து செல்லும் இடமாகவும் இருந்தன. அனைவரும் இந்த இடங்களை ‘COFFEE HUMP’ என்று அழைத்தனர். மேலும் இந்த இடத்தை ‘அறிவாளிகளுக்கான இடம்’ என்றும் கூறினர். அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வரும் நபர்களும் இந்த காபியை குடித்தனர். அவர்கள் காபியை ‘Arabian Wine’ என்றும் அழைத்தனர்.
17ஆம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பா பகுதிகளுக்கு காபி வளர்க்கும் மற்றும் குடிக்கும் பழக்கம் பரவியது. அதன் பின்னர் 1625 ஐரோப்பா நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் காபியை பார்த்து பயந்தனர். காபி கசப்பாக இருப்பதாலும், கருமை நிறத்தில் இருப்பதாலும் அவர்கள் இது ஒரு ‘சாத்தானின் கசப்பான பானம்’ என்று கூறினர். ஆனால் உலகம் முழுவதும் காபியை அருந்துவதால் இவர்கள் இந்த விசயத்தை போப்பாண்டவரிடம் ஒப்படைத்தனர்.
ஏழாவது போப் கிளமென்ட் என்பவர் இந்த பானத்தை ஆராய்ந்து, பின்னர் இந்த பானத்தை குடிக்கலாம் என்று அறிவித்தார். அதன் பின்னர் ஐரோப்பிய மக்கள் அனைவரும் காபியை குடிக்க ஆரம்பித்தனர். பென்னி யூனிவெர்சிட்டியிலும் இந்த காபியை பிரபலப்படுத்தி குறைந்த விலைக்கு விற்றனர். லண்டனில் உள்ள மக்கள் அனைவரும் பொதுவாகவே காலையில் எழுந்ததும் ஒயின் கலந்த பானத்தை குடித்து தான் நாளை துவங்குவார்கள்.
காபி வந்த பின்பு, ஐரோப்பிய மக்கள் காலையில் எழுந்ததும் காபியை குடித்துவிட்டே அவர்களின் நாளை துவங்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் இங்கிலாந்தில் மட்டும் 300 coffee house திறக்கப்பட்டது. வணிகம் செய்யக்கூடியவர்கள், பல முதலாளிகள் என பல்வேறு நபர்கள் இந்த காபி வணிகத்தை ஏற்றுக்கொண்டனர். 1773-இல் மூன்றாம் ஜார்ஜ் என்ற அரசர் தேயிலை மீது அதிகப்படியான வரி விதித்தார்.
இதனால் தேயிலைக்கு எதிராக பல கிளர்ச்சிகள் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா மக்கள் டீக்கு பதிலாக காபி குடிக்க ஆரம்பித்தனர். அரேபியாவில் காபியின் தேவை அதிகமானதால் டச்சுக்காரர்கள் ஐரோப்பாவில் இருந்து காபி பீன்ஸ்களை வாங்கி, இந்தோனேசியாவில் பயிரிட்டு காபியை விளைவித்தனர். இவ்வாறு ஒவ்வொரு நாடுகளும் காபியை ஒரு முக்கிய வணிகமாக ஏற்றுக்கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்.
தற்போது பல ஆண்டுகள் கடந்து இன்று வரைக்கும் அனைவரும் காபியை குடித்து வருகின்றனர். ஆனால் இந்த காபி என்பது பல நாடுகளிலும் மிகப்பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது கச்சா எண்ணெய் எவ்வாறு டாலரின் மதிப்பை தீர்மானிக்கிறதோ? அதே போல அந்தக்காலத்தில் இந்த காபி பீன்ஸ் தான் சர்வதேச விலையை தீர்மானித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பேர் பெற்ற காபியை கொண்டாடும் வகையில், வருடந்தோறும் அக்டோபர் 1 சர்வதேச காபி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் கர்நாடக மாநிலம் குடகு மலை பகுதியில் தான் காபி முதன்முதலில் ஆங்கிலேயர்களால் பயிரிடப்பட்டது. இந்திய அளவில் காபி உற்பத்தியில் கர்நாடக மாநிலம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் ஏற்காடு, கொல்லி மலை, கொடைக்கானல், ஏலகிரி, ஜவ்வாறு மலை உள்ளிட்ட இடங்களில் காபி விளைவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிலம்பத்திற்கு இப்படி ஒரு வரலாறா? எகிப்திற்கு சிலம்பம் சென்றது எப்படி? சிலிர்ப்பூட்டும் தகவல்கள்! - History Of Silambam