சென்னை: கோடைக் காலத்தில் இயற்கையின் இன்றி அமையாத சில விஷயங்களைத் தாவரங்களில் பார்க்கலாம். மற்ற காலங்களில் செழித்து நிற்கும் மரம், செடி, கொடிகள் எல்லாம் வெயிலில் காய்ந்து பட்டுக்கிடக்கும். ஆனால் வேப்ப மரம், மா மரம், பலா மரம் உள்ளிட்டவை கோடையில் தான் கொழுந்தெடுத்துப் பூத்துக் குலுங்கும். பல நேரங்களில் நாம் அதைப் பார்த்துச் சிந்தித்திருப்போம்.
இந்த மரங்கள் மட்டும் எப்படி இந்த வெயிலின் தாக்கத்தைத் தகிக்கிறது என்று. அது தான் இயற்கையின் அழகான திட்டம். மழை மற்றும் குளிர் காலங்களில் பொலிவிழந்து கிடக்கும் வேப்ப மரங்கள், மண்ணிற்கு அடியில் தனக்கான வேலையைச் செய்துகொண்டே இருக்கும். கோடை வந்தவுடன் செழித்து நிற்கும். வெயிலின் அவ்வளவு தாக்கத்தையும் தாங்கி செழிப்போடு இருக்கும் வேப்ப மரத்தின் பயன்களை மனிதர்கள் எடுத்துக்கொள்ளும்போது, சூட்டின் தாக்கத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
வீட்டின் முன்பு வேப்ப மரம் இருந்தால் குளிர்ச்சியான மருத்துவக்காற்று கிடைக்கும். வேப்பம் மரத்தின் இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் சூட்டால் ஏற்படும் கட்டிகள், வியர்வை குரு போன்றவை சரியாகும். வேப்பங்கொழுந்தை அரைத்து ஒரு உருணை விழுங்கி, ஒரு கிளாஸ் மோர் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு தணிவதுடன், குடலில் உள்ள கெட்ட புழுக்களும் செத்துவிடும்.
குடல் புண்களும் ஆறிவிடும். வேப்பம் பழத்தில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யை எடுத்து வைத்து, காயம் ஏற்படும்போது அதில் வைக்கப்பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பலன்களைத் தரும். இதையெல்லாம் கடந்து வெப்பம் பூ-வை வைத்து ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும். வயிறு தொடர்பான அத்தனை கோளாறுகளுக்கும் இந்த வேப்பம் பூ ரசம் தீர்வாக அமையும்.
வேப்பம் பூ ரசம் வைக்கத் தேவையானப் பொருட்கள்:
- நிழலில் காயவைத்த வேப்பம் பூ : 1 டீ ஸ்பூன்
- புளி : நெல்லிக்காய் அளவு
- வெல்லம் : 1/2 டீ ஸ்பூன்
- உப்பு : தேவையான அளவு
- மஞ்சள் : 1/4 டீ ஸ்பூன்
- நெய் : 1 டீ ஸ்பூன்
- கடுகு : 1 டீ ஸ்பூன்
- எண்ணெய்: தேவையான அளவு
- சிவப்பு மிளகாய் : 4 மதல் 5
- உளுந்தம் பருப்பு : 1/2 டீ ஸ்பூன்
- துவரம் பருப்பு : 1/2 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை: சிறிதளவு
- பெருங்காயம்: 1/4 டீ ஸ்பூன்
செய்முறை: முதலில் புளியை எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். அது நன்றாக ஊறிய பிறகு அதைக் கரைத்து சக்கை மற்றும் தண்ணீர் தனியாக மாற்றிக்கொள்ளுங்கள். அந்த தண்ணீரில், வெல்லம், உப்பு, மஞ்சள் மற்றும் பெருங்காயம் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் ஊற்றி, அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு வேப்பம் பூவை போட்டு லைட்டாக சூடான உடன் எடுத்து தனியாக ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளுங்கள்.
பிறகு அதே பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, கடுகு, சிவப்பு மிளகாய், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, கருவேப்பிலை உள்ளிட்ட தாளிப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் போட வேண்டும். பிறகு அந்த புளி கரைச்சல் தண்ணீரை அதில் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக அடுப்பை அணைக்கும் நேரத்தில் வருத்து வைத்த வேப்பம் பூ-வை கொட்டி இரக்க வேண்டும். இதே ஃபார்முலாவை நீங்கள் மிளகு ரசம் செய்து அதிலும் வேப்பம் பூ-வை போடலாம். அப்போது வெல்லத்தை மட்டும் தவிர்த்துவிட்டு மிளகு, சீரகம் மற்றும் பூண்டைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
(பின் குறிப்பு: வேப்பம் பூ வருடத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை மட்டுமே கிடைக்கும் என்பதால், கிடைக்கும்போது அதைக் கொஞ்சம் அதிகமாகப் பறித்து, நிழலில் காய வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டுப் பத்திரப்படுத்தி வையுங்கள். வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்)
இதையும் படிங்க:பச்சிளம் குழந்தைகளுக்குச் சூடு பிடித்து அழுதால் என்ன செய்வது? நாட்டுப்புற மருத்துவம் கூறும் அருமருந்து.! - What To Do Relieve Body Heat Baby