அன்றைய காலகட்டத்தில் செருப்பு இல்லாமல் காடுமேடு என அனைத்து விதமான இடங்களிலும் பயம் இல்லாமல் தாரளமாக நடந்து வந்தனர். ஆதுவே, இன்றைய காலத்தில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. ஏன், தற்போது வீட்டிற்குள்ளேயே காலணிகளை அணிந்து நடக்கும் நிலை உள்ளது. தெருக்கள், சாலைகள் சமநிலையின்மை, சுத்தமின்மை போன்ற காரணங்கள் வெறுங்காலுடன் நடப்பதற்கு தடையாக இருக்கின்றன. ஆனால், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தினசரி வெறுங்காலுடன் நடக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
தினசரி 15 நிமிடங்களாவது புல்வெளிகள், மணல் பரப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றினால் ஏராளமான நன்மைகளை பெறலாம். ஏன், மாலை போடுபவர்கள் விரதம் முடியும் வரை காலணி இல்லாமல் நடப்பார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாக காரணங்கள் இருந்தாலும் அதற்கு இணையாக அறிவியல் ரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க...
- மன அழுத்தம் குறையும்: வெறுங்காலில் நடப்பதால் பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும் என அறிவியல் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி, கால்களுக்கும் நரம்புகளுக்கும் அழுத்தத்தை கொடுத்து இயக்குவதன் மூலம் மன அழுத்தம் குறையும் என நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழில் வெளியான ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்தவும் இந்த நடை பயணம் உதவும்.
- கால் தசைகள் பலப்படும்: காலணிகள் அணிவது கால்களில் இயல்பான இயக்கத்தை மட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில், வெறுங்காலுடன் நடப்பது கால்களின் தசைகளை வலுப்பெற உதவி செய்கிறது.
- நினைவாற்றலை அதிகரிக்கும்: வெறுங்காலுடன் நடப்பது நினைவாற்றலை அதிகரிக்க செய்வதாக ஆய்வு கூறுகிறது. இதன் நன்மைகளுக்காக ஆஸ்திரேலியர்கள் விழிப்புடன் இருக்க இது ஒரு சிறந்த வழியாக கருதுகின்றனர்.
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்: வெறுங்காலுடன் நடக்கும் போது உள்ளங்கால்களில் அழுத்தம் ஏற்படும். அதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதன் விளைவாக, இதயம், மூளை ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கும். அதனால், நடைபயிற்சி மேற்கொள்ளும் போது கால் பாதங்களை தரையில் அழுத்தி மசாஜ் செய்வது கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
- இயற்கையுடன் தொடர்பு ஏற்படும்: வெறுங்காலுடன் நடப்பது மண்ணின் ஆற்றலுடன் இணைந்திருப்பதை உணர உதவும். மேலும், இது நமது புலன்களை வலிமையாக்க உதவியாக இருக்கிறது. வெறுங்காலுடன் நடக்கும் போது நாம் எங்கு நடக்கிறோம் என்பதை அறிந்து மிக விழிப்புணர்வோடு நடக்கிறோம். இதனால் நம் மனதை எச்சரித்து புலன்களை அதிகரிக்க செய்கிறது.