தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய்.. மருத்துவர்கள் கூறுவது என்ன? - Liver diseases

Liver diseases: சமீப காலத்தில் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று சிகிச்சை பெற வேண்டும் என அப்போலோ கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர்கள்
கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 8:08 PM IST

திருச்சி: அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை பற்றிய செய்தியாளர் சந்திப்பு திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது பேசிய கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் விஜய் கணேசன் கூறியதாவது, “நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளைச் செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது.

மருத்துவர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

உணவு பழக்கவழக்கம், உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, அதீத குடிப்பழக்கம் உள்ளிட்டவற்றால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 20 சதவீதம் பேருக்கு ஏதாவதொரு விதத்தில் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், சமீபகாலமாக கல்லீரல் கொழுப்பு நோய்கள் அதிகரித்து வருவது உடனடி கவனம் மற்றும் சிகிச்சைக்கான அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது.

கல்லீரல், கணைய, பித்தநாள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது வரை 2 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு, அவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்” என்று கூறினார்.

கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் குமரகுருபரன் கூறியதாவது, “குடிப்பழக்கம் அல்லாது வேறு சில காரணங்களாலும் கல்லீரல் நோய் ஏற்படும். அதிகப்படியாக துரித உணவுகளை எடுத்துக்கொள்வது, சீரற்ற இரத்த அழுத்தம், அதிகப்படியான மாத்திரைகளை உட்கொள்வது உள்ளிட்டவற்றால் கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கல்லீரல் நோய் பாதிப்புகள்:கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிப்பு, நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக் கூடியவை. அதேவேளையில், நாள்பட்ட பாதிப்புகள் உடல்பருமன், மதுப்பழக்கம், வைரஸ் தொற்றுகளால் ஏற்படக்கூடியவை. நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் வெளிப்பட சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம். பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவற்றின் தாக்கம் வெளிப்படையாகவும், அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடியதாகவும் அமைகிறது.

கல்லீரல் நோய் அறிகுறிகள்:இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடல் சோர்வு, கண்களில் மஞ்சள் பூத்திருப்பது, சரும அரிப்பு, கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம், காரணமில்லாமல் எடை குறைதல், எளிதில் காயமடைவது, சிறுநீர் கருப்பாக செல்வது, மலம் வெளிறிய நிலையில் இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.

ரத்தத்தில் நச்சுப் பொருள்களை அகற்றுவதில் கல்லீரலுக்கு சிரமம் ஏற்படுவதால் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய அறிகுறிகள் கல்லீரல் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், செயல்பட முடியாத நிலையையும் வெளிப்படுத்துபவை என்பதால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம்” என்று தெரிவித்தார்.

சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சை தமிழ்நாடு தலைவர் இளங்குமரன் கூறுகையில், “கல்லீரல் நோய் பாதிப்பின் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. உறுப்பு தானம் செய்வோரைப் பொருத்து இரண்டு வகைகளில் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

உயிரிழந்தவரின் உறுப்பு (கடாவரிக்) அல்லது உயிருடன் இருப்பவரிடம் இருந்து பெறப்படுவது என இரண்டு வகைகளில் கல்லீரல் பெறப்படுகிறது. மாற்று சிகிச்சைக்கு எந்த அளவுக்கு உடனடி தேவை உள்ளது, தானம் அளிப்பவர் தயாராக உள்ளாரா? மற்றும் நோயாளியின் இதர சூழல்கள் ஆகியவற்றைப் பொறுத்து எந்த சிகிச்சை முறையைப் பின்பற்றுவது என தேர்வு செய்யலாம்” என்றார்.

இதையும் படிங்க:கள்ளச்சாராயம் குடித்து குணமடைந்தவர்கள் மீண்டும் குடித்தால் என்ன நடக்கும்? - மருத்துவர் கூறும் தகவல்! - What happens drink illicit liquor

ABOUT THE AUTHOR

...view details