சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் மிக முக்கியமான நோயான புற்றுநோய் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புகையிலை பயன்பாடு அதிகரிப்பதும், இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடையே புகையிலை பொருட்களை பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண்களும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பிறக்கும் குழந்தைக்கும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இ-சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள்:இது குறித்து சென்னை அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் காதர் ஹூசைன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “இளைஞர்களிடம் தற்பொழுது இ- சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிரித்துக் கொண்டே வருகிறது.
ரெகுலர் சிகரெட்டுடன் ஒப்பிட்டு, இ-சிகரெட் பயன்படுத்துவதால் பாதிப்புகள் இல்லை என கூற முடியாது. இ-சிகரெட்டிலும் வேதிப்பொருள்கள் கலந்துள்ளதால், நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
இ-சிகரெட்டால், சிலருக்கு மூச்சுவிடும் குழாயில் பாதிப்பும் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் நெஞ்சு எரிச்சல், மாரடைப்பு உள்ளிட்ட பிற உறுப்புகளை பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இ-சிகரெட் வழக்கமான சிகரெட் பயன்படுத்துவதற்கு மாற்று கிடையாது. இ சிகரெட் பிடித்தால் பாதிப்பு ஏற்படாது என நினைப்பது தவறானது.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள்:புகையிலை பொருட்களை உட்கொண்டும், சிகரெட்டும் புகைப்பவர்களுக்கு, உணவுக்குழாய் புற்றுநோய், வாய் புற்றுநோய், உள்வாய் புற்றுநோய், பேச்சுகுழாய், வயிறு, பெண்களின் கருப்பை, கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளிலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கரோனா காலத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறினோம்.
அப்போது மக்கள் சற்று விழிப்புடன் இருந்தனர். ஆனால் தற்பொழுது நிலைமை அப்படி கிடையாது. தற்பொழுது மீண்டும் புகைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர் இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்கள், முதியோர்கள் என யாரும் புகைப்பிடித்தலை கைவிடவில்லை.
புகையிலைப்பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள்: தற்போது இளைஞர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் வந்துள்ளது. புதியதாக இ-சிகரெட் வந்ததால் அதன் பயன்பாடும் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிகளில் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வளர்இளம் பருவத்தினர் சொல்வதை கேட்கமாட்டார்கள். ஆகவே அவர்களை பயமுறுத்தும் வகையில் எடுத்துக் கூற வேண்டும்” என்று கூறினார்.
இந்தியாவில் உள்ள 15 முதல் 17 வயதிற்குட்பட்டவர்கள் 54 சதவீதமும், 18 முதல் 24 வயது இளைஞர்கள் 28 சதவீதமும் புகையிலை பொருட்களை நுகர்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புகையிலை பயன்படுத்தாதவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படுமா?:மேலும் அவர் கூறுகையில், “நுரையீரல் புற்றுநோய் முன்னர் ஆண்களுக்குத் தான் அதிகளவில் வந்துக் கொண்டு இருந்தது. ஆனால் தற்போது பெண்களுக்கும் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. சிலருக்கு மரபணு வழியாக வருகிறது. வீட்டில் கணவர் புகைப்பிடிக்கும் போது, மனைவி வீட்டில் இருப்பார். அதன் மூலம் அவருக்கும், மற்றவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது.
புகையும், மதுவும் ஏற்படும் பாதிப்புகள்: புகைப்பிடித்தலும், மதுவும் சேரும் போது, 15 ஆண்டுகளில் வரக்கூடிய நோய்கள் 10 ஆண்டுகளில் வந்து விடும். மது குடிப்பதால் கல்லீரல், கணையம் தான் அதிகளவில் பாதிக்கப்படும். இந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
புகைப்பதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்: பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடித்தால், பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக பிறக்கலாம். 9 மாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை 7 மாதங்களில் குறைப் பிரசவத்தில் பிறக்கலாம். குழந்தை கர்ப்பத்திலேயே இறக்கலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம். இது மட்டுமில்லாமல் இயற்கையாக குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதனால் நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
புற்றுநோய் சிகிச்சை:கரோனா தொற்றுக்கு மக்கள் அவர்களாகவே வந்து புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்கின்றனர். இதனால் ஆரம்பநிலையிலேயே புற்றுநோயை கண்டுபிடிக்கிறோம். இதன் காரணமாக புற்றுநோய் அறுவை சிகிச்சை அதிகரித்துள்ளது. நுரையீரல் புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டுபிடித்தால் மட்டும் தான் குணப்படுத்த முடியும்.
சிடி ஸ்கேன் செய்து கட்டி 3 சென்டிமீட்டருக்குள் இருந்தால், அறுவை சிகிச்சை தான் வழியாகும். தற்பொழுது கீ ஹோல் அதாவது நுண் துளை போட்டு, நுணுக்கமாகவும், ரோபோ மூலமாகவும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே முன்கூட்டியே, அதாவது ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகினால், விரைந்து குணமடைந்து வீட்டிற்கு 3 நாட்களில் செல்ல முடியும்.
புகையிலை பழக்கத்தை விட முடியுமா?:புகையிலை பழகத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும் எனில், அதனை உடனே நிறுத்துவது ரொம்ப கடினம். எனவே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்தலாம். அப்படி செய்தால் அவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடும் வாய்ப்பு அதிகமுள்ளது. புகைப்பிடித்தலை திடீர் என ஒரே நாளில் விடுபவர்கள், மீண்டும் ஒரு பிரச்சனை வரும் போது புகைப்பிடிப்பார்கள். ஒரே நாளில் விட நினைத்தால் கடினம். மருத்துவரின் ஆலோசனையை பெற்று புகைப்பிடித்தலை மெதுவாக விட்டால், புகைப்பிடிப்பவருக்கும், சமுதாயத்திற்கும் நல்லது. ஒருவர் புகைப்பிடிப்பதால், அவருக்கு மட்டும் இல்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
புற்றுநோய் உயிரிழப்பு: நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 1000 பேரில் 800 பேர் உயிரிழக்கின்றனர். 200 பேர் தான் பிழைக்கின்றனர். இதற்கு காரணம் நோயின் கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவது. ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் முழுமையாக சிசிக்சை அளித்து குணப்படுத்த முடியும். இதனை மக்கள் தான் மருத்துவரை அணுகி நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 100 பேரில் 35 பேர் இறக்கின்றனர். இறப்பு 35 சதவீதமாக உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:வளரிளம் பெண்கள் கர்ப்பமடைவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? மருத்துவரின் முக்கிய அறிவுறுத்தல்கள்! - Teenage Pregnancy