மூடுபனியில் காலை எழுந்ததும் குளிருக்கு இதமாக குடிக்கும் பானம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுப்பதை போல ஆரோக்கியமாக இருந்தால் கூடுதல் சிறப்பு தானே? அந்த வகையில், சீரகம், சோம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து செய்யப்படும் இந்த நீர் குளிர்காலத்தில் நாளை தொடங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது. இந்நிலையில், அதன் நன்மைகளையும், இந்த பானத்தை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ள சீரகம், சோம்பு மற்றும் இலவங்கப்பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்களை உள்ளடக்கியுள்ள சீரகம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட இலவங்கப்பட்டை குளிர்காலத்தில் தொற்று நோய் மற்றும் சளி பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
செரிமானம் சீராகும்: பொதுவாக, குளிர்காலத்தில் சூடான மற்றும் நாவிற்கு சுவையை தூண்டும் ஜங்க் உணவுகளை அதிகளவில் உண்பதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். இதனால் ஏற்படும் வயிறு உப்புசம், வீக்கம் மற்றும் செரிமான அசெளகரியங்களை சீர் செய்ய சோம்பு உதவியாக இருக்கிறது. மேலும், செரிமான நொதிகளை சுரக்கவும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சுதலுக்கு சீரகம் உதவியாக இருக்கிறது.
எடையில் கட்டுப்பாடு:இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும் பண்புகளை இலவங்கப்பட்டை கொண்டுள்ளது. இதனால், அடிக்கடி பசி மற்றும் வகை வகையாக சாப்பிடத் தூண்டும் உணர்வை தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், சீரகத்தின் வளர்சிதை மாற்ற நன்மைகள், குளிர்காலத்தில் எடையை பராமரிக்க உதவுகிறது. 2018ல் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், இலவங்கப்பட்டை சப்ளிமெண்ட்ஸ் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவுகள் உள்ளிட்ட இருதய ஆபத்து காரணிகளை மேம்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளது.
உடல் நீரேற்றம்: மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் தண்ணீர் நுகர்வு குறைவது இயல்பு தான். ஆனால், உடல் புத்துணர்ச்சியாகவும் சருமம் சார்ந்த பிரச்சனை ஏற்படாமல் இருக்க, தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அந்த வகையில், குளிர் காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க இந்த பானம் உதவியாக இருக்கும்.