ஐதராபாத்:ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பாதுகாப்பான மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவு மிகவும் முக்கியமானது. ஆனால், தற்போது இருக்கும் சுற்றுச்சூழலும் நவீன வாழ்க்கை முறையும் நமது உணவு மற்றும் உணவுப் பழக்கத்தை பெரிதும் பாதிக்கிறது.
இந்நிலையில், இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ளது. அதில், நமது இல்லங்களில் சமைக்கும் உணவுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகமாக கழுவுவதை நிறுத்துங்கள்: உணவு சமைப்பதற்கு முன் அரிசி,பருப்பு, தானியங்களை அதிக முறை கழுவுவதைத் தவிருங்கள். இரண்டு முறைக்கு மேல் கழுவும் பட்சத்தில் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை இழக்க நேரிடுகிறது.
வெட்டிய பின் கழுவ வேண்டாம்: காய்கறி அல்லது பழங்களை வெட்டிய பின்னர் கழுவக் கூடாது. அதே போல, பீட்ரூட், பப்பாளி போன்ற தோல் உரிக்கப்பட்ட பின்னர் சாப்பிடப்படும் உணவுப் பொருட்களைத் தோல் நீக்கியப் பின் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஊட்டச்சத்துகள் முக்கியம்: நம்மில் பலர், காய்கறிகளை வெட்டும் போது, பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு, நறுக்கிய காய்கறிகளை அதில் போட்டு விடுவோம். பின்னர், அதைச் சமைக்கும் பொழுது பயன்படுத்துவோம். இப்படி, செய்வதன் மூலம் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை நாம் முழுமையாக பெற முடியாமல் போய்கிறது.
மூடி வைக்கவும்: சமைத்த உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் புத்துணர்ச்சியைப் பராமரிக்கவும், மாசுபடுவதை தடுக்கவும் சமைத்த உணவுகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.
தண்ணீர் அளவை குறைக்கவும்: காய்கறிகள், தானியங்கள், பருப்புகளை வேக வைத்தால், அந்த தண்ணீரை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, சத்துக்களை தக்கவைத்துக்கொள்ள அதிகப்படியான தண்ணீரை சேர்க்காமல் சமையலுக்கு தேவையான அளவு தண்ணீரை சேர்த்து சமைக்க வேண்டும்.
எண்ணெய்யை ரீ யூஸ் செய்யாதீர்கள்: உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மூலக் காரணமாக இருப்பது எண்ணெய் தான். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சமைத்த எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவதால், உடலுக்கு பல தீமைகள் விளைவிக்கிறது என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
ஆரோக்கியமான சமையல் முறை:எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக முடிந்த அளவு ஆவியில் தயாராகும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
பாத்திரத்தை பார்த்து தேர்ந்தெடுங்கள்:என்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு எதில் சமைக்கிறோம் என்பதும் முக்கியம். மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையை தருவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
இதையும் படிங்க:'என் ஆசை கொத்தமல்லியே'..இரு வாரங்கள் வரை கொத்தமல்லியை கெட்டுப்போகாமல் வைத்திருப்பது எப்படி?
உங்க காபியில் நெய் இருக்கா?..நெய் காபி குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள் என்ன?