சென்னை:டிராஃபிக் பற்றிய கவலை வேண்டாம். மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கான வசதி, மிதந்து வரும் கடல் காற்று, இளையராஜா பாட்டு கேட்டு அப்படியே ஒரு வாக்கிங் போனா எப்படி இருக்கும். ஆசை தான்! ஆனா சென்னையில இதெல்லாம் எப்படி? என யோசிக்கிறீர்களா? இப்படி யோசிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது தான் சென்னையில் இருக்கும் இந்தியாவின் முதல் 8 கிலோ மீட்டர் நீள வாக்கிங் பாதை.
டோக்கியோ நகர மாடலில் உருவாகியிருக்கும இந்த நடைபாதை தற்போது உடல் நலம் பேணுபவர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. காலையில் எழுந்து நடைபயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பதாக கடந்த 20 வருடங்களாக வாக்கிங் செல்லும் 80 வயதான சங்கர் நடைபயிற்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார்.
நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தின் கீழ், அடையார் ஆவின் பார்க்கில் இருந்து பெசன்ட் நகர் பீச் வரைக்கும் என 8 கிலோ மீட்டர் நீள பாதை கடந்த ஆண்டு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.காலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த சாலையில் சென்று பார்த்தால் குழந்தைகள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்கிங் செல்வதை பார்க்கலாம்.
இந்த குறிப்பிட்ட நேரத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி, தினசரி நடைபயிற்சி செய்பவர்களிடம், நடைபயிற்சி நன்மைகளையும், அவர்களது அனுபவங்களையும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் கேட்டது. அப்போது, ''நான் இங்கு 20 வருடங்களாக நடைப்பயிற்சி செய்து வருகிறேன். காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால் அன்றைய நாள் சிறப்பாக அமைகிறது.
உடல் பலம் அதிகரிக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு சிறந்தது, உடல் எடையை குறைப்பதற்கும், மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உதவுகிறது, இந்த பெசன்ட் நகரில் நடப்பதற்கு அருமையாக உள்ளது" என 80 வயதான சங்கர் தெரிவித்தார். மேலும், "இங்கு நிறைய பேர் நடப்பதால் தனியாக நடக்கிறோம் என்ற எண்ணம் வராது. அருகில் கடற்கரை இருப்பதால் சுவாசிப்பதற்கு நன்றாக இருக்கிறது.
வழுக்கி விழும் அபாயம்:இங்கு இருக்கிற பிரச்சனை என்னவெனில் நடக்கும் இடத்தில் கடைகளை போடுகின்றனர், நடப்பதற்கு போடப்பட்டுள்ள டைல்ஸ் வழுவழுப்பாக உள்ளது, இதனால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே கொஞ்சம் நடப்பதற்கு ஏதுவாக சற்று முரடாக இருக்கும் டைல்ஸ் போட வேண்டும். நடைப்பயிற்சியில் இருக்கும் நன்மையை இன்றைய கால இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் வந்துள்ளது'' என்றார்.