சென்னை: 86 வயதான, ஒரு பெண் நோயாளிக்கு செயற்கை நுண்ணறிவால் உந்துவிக்கப்படும் ஒயர் இல்லாத ஒரு நவீன பேஸ்மேக்கரை வெற்றிகரமாக உட்பதியம் செய்திருப்பதன் மூலம், சென்னை மருத்துவர்கள் மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
சென்னையில் வசிக்கும் 86 வயதுள்ள நோயாளிக்கு இந்தியாவில் அபாட் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஒரு புரட்சிகர கருவியான AVEIR VR ஒயர் இல்லாத பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பமானது, வழக்கமான பேஸ்மேக்கர்களுக்கு ஒரு மாற்றாக, அதிக பாதுகாப்பான, குறைவான ஊடுருவல் உள்ள மாற்று வழிமுறையை வழங்குகிறது. குறிப்பாக, சிக்கலான மருத்துவ பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
வழக்கமான பேஸ்மேக்கர்களைப் போல் இல்லாமல், ஒயர் இல்லாத பேஸ் மேக்கர்களில், மார்பில் கீறலிடுவது, ஜெனரேட்டர் பாக்கெட்டுகள் அல்லது இன்சுலேஷன் செய்யப்பட்ட வயர்கள் (லீடுகள்) ஆகியவற்றிற்கான தேவை நீக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, இந்த புதிய கருவியானது, இதயத்தின் வலது கீழறைக்குள் நேரடியாக உட்பதியம் செய்யப்படுகிறது.
பேஸ்மேக்கர் எடை இவ்வளவு தானா?:இதன் காரணமாக, தொற்றுகளுக்கான இடர்வாய்ப்பு, ஒயர்கள் இடம்பெயர்தல் மற்றும் பிற சிக்கல்களுக்கான வாய்ப்புகள் கணிசமாக குறைக்கப்படுகின்றன. இந்த பேஸ்மேக்கரின் எடை 2.4 கிராம்கள் மட்டுமே. நீடித்த நம்பகத்தன்மைக்கு 17 ஆண்டுகள் செயல்படும் பேட்டரி, காந்தப்புலம் இல்லாத வடிவமைப்பின் காரணமாக, விமான நிலைய ஸ்கேனர்கள், எம்ஆர்ஐ சாதனங்கள் மற்றும் அதிக வோல்டேஜ் உள்ள மின்சாரம் ஆகியவற்றிற்கு இணக்கநிலை பேணப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை மற்றும் இயந்திர இயக்க சுழற்சி ஆதரவு மையத்தின் உயர்நிலை சிறப்பு நிபுணர் டாக்டர். ஆர். ரவிக்குமார் இந்த புதிய செயல்முறை குறித்துப் பேசுகையில், "இந்த பேஸ்மேக்கர், இதய பராமரிப்பு சிகிச்சைப் பிரிவில் ஒரு மேம்பட்ட முன்னேற்ற நகர்வைக் குறிக்கிறது. இதன் மிகக்குறைவான ஊடுருவல் வடிவமைப்பானது, வழக்கமான பேஸ்மேக்கர் பொருத்தும் செயல்முறைகளோடு தொடர்புடைய இடர்களை நீக்கி, நிகரற்ற பாதுகாப்பையும், சௌகரியத்தையும் வழங்குகிறது.
இந்த வயதான மூதாட்டியான நோயாளிக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த பேஸ்மேக்கர், பல சிக்கல்களை ஏற்படுத்தியிருந்ததால், தற்போது பொருத்தப்பட்டிருக்கும் AVEIR VR பேஸ்மேக்கர், சிக்கல்கள் இல்லாத, மிக சௌகரியமான, புரட்சிகரமான மாற்று வழிமுறையாக அவருக்கு பயனளித்திருக்கிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க:கர்ப்பிணிகள் காபி குடித்தால் சிசுவிற்கு ஆபத்து? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!