சென்னை:எல்லா பெண்களும் பட்டு போன்ற மென்மையான கூந்தலுக்குத் தான் ஆசைப்படுவர். ஆனால் சூரிய ஒளி பாதிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்பு ஆகியவற்றால் கூந்தல் வறண்டு, பொலி விழந்து காணப்படலாம். இது மட்டுமில்லாமல் ஹேர் ஸ்டைலிங் செய்யும் ஹேர் ஸ்ட்ரைட்னர் மற்றும் ஹேர் டிரையர் உள்ளிட்ட வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துவதாலும் கூந்தல் வறட்சி ஏற்படும். கூந்தல் வறட்சியால் முடி உடைதல், முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படலாம்.
இதற்காகப் பணத்தைக் கொட்டி, ஹேர் ஸ்பா களுக்கெல்லாம் செல்ல தேவையில்லை. செலவே இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கை முறைப்படி வறண்ட கூந்தலை மிருதுவான கூந்தலாக மாற்ற முடியும். வறண்ட கூந்தல் உள்ளவர்கள் முதலில் என்னென்ன செய்யக்கூடாது என்பதைப் பார்க்கலாம்.
- ஹேர் ஸ்ட்ரைட்டனிங், கர்லிங், டிரையர் உள்ளிட்ட வெப்ப மூட்டும் கருவிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முயலாவிட்டால், தவிர்க்க வேண்டும்.
- அடிக்கடி தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- அதிக கெமிக்கல் உள்ள ஷாம்புகளின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
- கெமிக்கல் நிறைந்த ஹேர் டைகளையும் பயன்படுத்தக்கூடாது.
- ஹேர் கலரிங் பயன்படுத்தக்கூடாது
செம்பருத்தி இலை மாஸ்க்:ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகள், 3 - 4 செம்பருத்தி பூ ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு அவை மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அவற்றை நன்கு தண்ணீர் விட்டு அரைத்து தலையில் மாஸ்க் போல் போட்டுக் கொள்ளவும். முடியின் வேர்க்கால்களிலும் படுமாறு தேய்த்துக் கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு தேய்த்துக் குளிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை இவ்வாறு செய்து வர வறட்சியான முடி, மிருதுவாக காணப்படும்.
முட்டை மாஸ்க்:முடியைப் பொலிவடைய வைப்பதில் ஆலிவ் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், முட்டையில் வெள்ளைக்கரு ஆகியவற்றை நன்றாகக் கலந்து தலையிலும், முடியிலும் தேய்த்துக் குளித்து வர முடி உதிர்வு நீங்கி, முடி மிருதுவாக இருக்கும்.