குளிர் பானங்கள் உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு காரணமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, சர்க்கரையின் அளவு அதிகம் நிறைந்த பானங்களின் நுகர்வு, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில், 2.2 மில்லியன் டைப் 2 நீரிழிவு நோயாளிகளையும் 1.2 மில்லியன் இதய நோயாளிகளை உருவாக்குவதாக தெரியவந்துள்ளது.
சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள பானங்களைத் தொடர்ந்து குடிப்பதால் உலகளவில் நீரிழிவு மற்றும் இதய நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃப்ரீட்மேன் ஸ்கூல் ஆஃப் நியூட்ரிஷன் சயின்ஸ் அண்ட் பாலிசியின் ஆராய்ச்சியாளர்கள்.
184 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட தரவு மற்றும் நேச்சர் மெடிசினில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், வளரும் நாடுகளில் குளிர்பானங்களால் ஏற்படும் நோய்களின் ஆபத்து கவலையளிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
குளிர்பானங்களின் அதிகமான நுகர்வு, நீரிழிவு மற்றும் இதய நோயிற்கு வழிவகுப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் இறப்புகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2020ம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில், சர்க்கரையின் அளவு நிறைந்த பானங்களின் நுகர்வால் கிட்டத்தட்ட 25% சதவிகதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு ஏன் ஏற்படுகிறது?: உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளைப் போலவே சர்க்கரை எளிதில் செரிமானம் அடைகிறது. சர்க்கரை, ரத்தத்தில் விரைவாக உறிஞ்சப்பட்டு ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது. இதன் நீண்ட கால நுகர்வு, எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. அதுமட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. உலகில் ஏற்படும் மரணங்களுக்கு இந்த இரண்டு தான் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவு மருத்துவக் கழகத்தின் ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளரும் இயக்குநருமான டாரியுஷ் மொசாஃபரியன், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளவர்கள் இந்த தீங்கு விளைவிக்கும் பானங்களை அதிகம் உட்கொள்கின்றனர் என்கிறார்.
இதையும் படிங்க:வீகன் உணவு முறை பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு..ஆய்வில் அதிர்ச்சி தகவல்!