சென்னை:"மச்சான் மோர் என்ன மோரு பீர் குடிச்சுப் பாரு உடம்பு சூடு எல்லாம் காத்தா பறந்துரும்" என இளைஞர்கள் பலர் தங்கள் சுயாதின ஆய்வு முடிவுகளை பரப்பி வருகின்றனர். இதையும் நம்பி பலர் பீர் வாங்கி வந்து அதை குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்து குடிக்கவும் செய்கின்றனர். இது உண்மைதானா? பீர் குடித்தால் உடல் சூடு தணியுமா? என்ற பெரும் எதிர்பார்ப்போடு பொதுநல மருத்துவர் சாந்த குமாரிடம் ஈடிவி பாரத் சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், பீர் குடித்தால் உடல் சூடெல்லாம் தணியாது உடலில் நீர்தான் குறையும் என கூறினார். இந்த கோடை வெயிலை சமாளிக்க முடியாமலும், உடல் சூடு காரணமாக அதை குறைக்க வேண்டியும் மக்கள் பலர் டின்களில் விற்கப்படும் சாஃப்ட் டிரிங்ஸ், பீர் உள்ளிட்டவைகளை அதிக அளவில் தேர்வு செய்கின்றனர்.
இதை குடிக்கும்போது அதில் கலக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் மற்றும் செயற்கை சுவையூட்டிகளை வெளியேற்ற சிறுநீரகம் அதிகம் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என மருத்துவர் சாந்த குமார் கூறினார். இதனால் காலப்போக்கில் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுவதுடன், கோடையில் டிஹைட்ரேட் ஆகவும் அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
மேலும், Beer drinkers kidney என்ற ஒரு நிலை இருக்கிறது அதை பலரும் தெரிந்திருப்பது இல்லை. இது என்னவென்றால், தொடர்ந்து பீர் குடித்துக்கொண்டே இருப்பவர்களின் சிறுநீரகம் சாதாரண மனிதர்களின் சிறுநீரகத்தை விட பெரிதாக மாறிவிடும். லிட்டர் கணக்கில் பீர் குடிக்கும்போது, அதை வெளியேற்ற சிறுரீகம் அதிகம் உழைத்துக்கொண்டே இருக்கும். அந்த செயல் நாளடைவில் தொடரும்போது அவர்களின் சிறுநீரகம் பெரிதாக மாறிவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிறுநீரகத்தில் உருவாகும் கனிமங்கள் மற்றும் உப்புகள் கடினமான படிவுகளாக மாறி காலப்போக்கில் சிறுநீரக்கத்தில் கற்களை உருவாக்கும். இதனால் சிறுநீர் கழிக்கும்போது கடுகடுப்பு, இடுப்பின் பின்புறம் மற்றும் அடிவயிற்றில் வலி, சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும்.
பீர் குடிப்பதால் இந்த நன்மை உள்ளது, அந்த நோய் சரியாகும் என்றெல்லாம் பலரும் நம்புவது மட்டும் இன்றி பிறரையும் நம்ப வைத்து வருகின்றனர் என தெரிவித்த மருத்துவர் சாந்த குமார், பீர் தொடர்ந்து குடிப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்குமே தவிர அதனால் எந்தவித நன்மையும் இல்லை என திட்டவட்டமாக கூறினார். அதற்கு பதிலாக உடல் சூடு தணிய வேண்டும் என நினைக்கும் நபர்கள் 10 ரூபாய் கூட செலவு செய்யாமல் வெறும் பச்சை தண்ணீரை தாராளமாக குடித்தாலே போதும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:Drinking And Lower Muscle Mass: அதீத குடிப்பழக்கத்தின் விபரீத விளைவு!- எச்சரிக்கும் மருத்துவர்கள்