தொங்கும் தொப்பை-ஐ குறைக்க வெள்ளை பூசணி ஜூஸ்..எப்படி குடிக்கணும் தெரியுமா? - Ash Gourd Juice Benefits
Benefits of drinking ash gourd juice in empty stomach: வீட்டு வாசலில் திருஷ்டிக்காக தொங்க விடும் பூசணிக்காயில் உடல் எடையை குறைப்பது முதல் மன அழுத்தத்தை போக்குவதற்கான நன்மைகள் கொட்டி கிடப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹைதராபாத்:உடல் எடையை குறைக்க இன்டர்மீடியட் பாஸ்டிங், வாட்டர் ,ஃபேலியோ, வீகன் என கடுமையான டயட் முறைகளை பின்பற்றி வரும் பலர், தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸை குடித்தால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? அதை செய்வது எப்படி? என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளை பூசணியில் உள்ள சத்துக்கள்:
கால்சியம்
பொட்டாசியம்
இரும்புச்சத்து
பாஸ்பரஸ்
நார்ச்சத்து
மெக்னீசியம்
வைட்டமின் பி மற்றும் சி
எடை குறைப்பு: சமீப காலமாக அதிக எடை அதிகரிப்பால் பலரும் அவதிப்படுகின்றனர். இப்படியான நிலையில், தினமும் ஒரு கிளாஸ் வெள்ளை பூசணி ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள கொழுப்பை விரைவில் குறைக்கலாம் என்கின்றனர் மருத்த்துவ நிபுணர்கள்.
மலச்சிக்கல் பிரச்சனை வராது: மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், உடனடி நிவாரணம் பெற மருத்துகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், தினமும் இந்த ஜூஸை பருகி வந்தால் மலச்சிக்கலுக்கு நல்ல பலன் தருவது மட்டுமல்லாமல் வாயு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
பதட்டத்தை குறைக்கிறது: இப்போதெல்லாம் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சிறிய விஷயங்களை மனதிற்குள் போட்டு வேதனை அடைகின்றனர். அடிக்கடி கவலையுடன் இருப்பவர்கள் பூசணிக்காய ஜூஸ் குடிப்பதன் மூலம் டென்ஷன் குறைந்து மன அமைதியுடன் இருக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றலை அதிகரிக்கிறது: சிலர் என்ன செய்தாலும் சோம்பலாக, சோர்வாக இருக்கிறது என்பார்கள். இவர்கள் பூசணிக்காய் ஜூஸை தினமும் குடிப்பதால், அதில் உள்ள வைட்டமின் பி3 உடனடி ஆற்றலை தந்து புத்துணர்ச்சியடையச் செய்கிறது.
வயிற்றுப்புண்: தினமும் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதால், அல்சர் பிரச்சனை குறைவதாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஜூஸை குடிப்பதால் உடல் குளிர்ச்சியோடு இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளை பூசணி ஜூஸ் செய்வது எப்படி?: வெள்ளை பூசனி தோல் நீக்கியது -1 கப், இஞ்சி - ஒரு துண்டு, எலுமிச்சை பழம் - பாதி, புதினா இலைகள் - 5, உப்பு - சிறிதளவு, தேன் - 1 ஸ்பூன்.
ஒரு மிக்ஸி ஜார் அல்லது பிளண்டரில், நறுக்கி வைத்த வெள்ள பூசணி, இஞ்சி, புதினா இலைகளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
பின்னர், இந்த ஜூஸை வடிகட்டி ஒரு கிளாஸில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, அந்த ஜூஸில் தேவையான அளவு உப்பு, எலும்பிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கினால் பூசணி ஜூஸ் தயார்.
பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.