உணவில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் ஓமம், அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பெரும்பாலானோர் பாதிக்கப்படும் செரிமான பிரச்சனையில் தொடங்கி, மாதவிடாய் சுழற்சி பிரச்சனையை தடுக்கவும் உதவியாக இருக்கிறது. அதன்படி, இந்த கட்டுரையில் ஓமம் தரும் நன்மைகள் மற்றும் அவை ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
செரிமானத்திற்கு உதவுகிறது: இரைப்பையில் கேஸ்ட்ரிக் சுரப்பை அதிகரிக்கும் தைமால் (Thymol) ஓமத்தில் நல்லளவில் உள்ளது. இந்த இயற்கையான செயல்முறை வயிற்று வலி, பிடிப்புகள், இன்ஃப்ளமேஷன் மற்றும் அஜீரணம் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. ஓமம் செரிமானப் பாதையை அமைதிப்படுத்தி, இரைப்பை குடல் தசைகளை தளர்த்த உதவுகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது:பைட்டோமெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஓமம் விதைகளின் சாற்றை எலிகளுக்கு கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில், இரத்த அழுத்தம் குறைவதாக தெரியவந்துள்ளது. ஓமத்தின் உள்ள பண்புகள் குறிப்பாக, தைமால் இரத்த நாளங்களை தளர்த்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். ஓமம் விதை சாறு, மொத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பைக் (LDL) குறைக்கும், அதே வேளையில் நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கும் என்கிறது ஆய்வு. இந்த பண்பு, இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இருமல் மற்றும் சளிக்கு உதவுகிறது: ஓம விதைகள் சுவாசப் பிரச்சனைகளுக்கு இயற்கையான சளி நீக்கிகளாகச் செயல்படுகின்றன. ஓமம் கலந்த தேநீர் காற்றுப்பாதையில் இருந்து சளியை அகற்றி இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிகின்றது. சர்வதேச ஆராய்ச்சிப்படி, ஓம விதைகள் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. தைமால் மற்றும் கார்வாக்ரோல் கலவைகள் ஈ. கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் குறிப்பாக உணவு மூலம் பரவும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுகின்றன.
வாய்வழி சுகாதாரம்: ஓமத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாய்வழி ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமைகின்றன. இது வாய்வழி தொற்றுகளை எதிர்த்து போராடவும் பல்வலியை குறைக்கவும் உதவியாக இருக்கிறது.