சென்னை: ஒரு சில காரணங்களால் கருத்தரிக்க இயலாத பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்தது தான் செயற்கை கருத்தரித்தல் முறையாகும். அதாவது செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்பங்களை (ART - Artificial Reproductive Technologies) பயன்படுத்தி கருவுறுவதாகும். இதில் ஐவிஎஃப் (IVF - In Vitro Fertillization) கருத்தரிப்பு சிகிச்சை முறை மிகவும் பிரபலமானது.
தற்போது கருத்தரிக்க முடியாத பலரும் இந்த ஐவிஎஃப் கருத்தரிப்பு சிகிச்சை முறை மூலம் குழந்தைப்பேற்றை அடைகின்றனர். இந்த நிலையில், ஐவிஎஃப் கருத்தரிப்பு சிகிச்சை முறை மூலம் பிறந்த குழந்தைகள், இளம் பருவத்தில் மனநலக்கோளாறால் பாதிக்கப்படுகின்றனரா? என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில், இயற்கையான முறையில் கருத்தரித்த குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், ஐவிஎஃப் கருத்தரிப்பு சிகிச்சை முறை மூலம் கருத்தரித்த குழந்தைகளுக்கு, தங்களது இளம் பருவத்தில் மனநலம் அல்லது நரம்பியல் வளர்ச்சியில் அதிக ஆபத்து இல்லை என்பது தெரிய வந்தது.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் பேராசிரியரான அலெக்ஸாண்ட்ரா மார்னியுனிக் இந்த ஆய்வு குறித்து ஐஏஎன்எஸிடம் கூறுகையில், "இந்த நீண்ட ஆய்விற்காக குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் பருவ வயதாகும் வரை அவர்களை கவனித்தோம்.
இதில் கருவுற்று பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் அதாவது மன இறுக்கம், மனச்சோர்வு, கவனக்குறைவு, அதிக செயல்பாடு குறைபாடு கோளாறு (ADHD Attention-deficit/hyperactivity disorder), சிந்தனை குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்பது கண்டறியப்பட்டது. 2004ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட பத்தாயிரம் குழந்தைகளை கண்காணித்துவரும் ஆஸ்திரேலிய குழந்தைகள் ஆய்வின் தரவுகளை பயன்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஐவிஎஃப் செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்த குழந்தைகளில் 22 சதவீதத்தினர் தங்களது இளம் பருவத்தில் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது. ஆனால் செயற்கை கருத்தரித்தலுக்கும், இளம் பருவத்தினரின் மனநலக்கோளாறுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்தஆய்வில் தெரிய வந்துள்ளது.
செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்திற்கு குழந்தைகளின் மன ஆரோக்கியம் குறித்து இந்த ஆய்வு உறுதியளிக்கிறது.
மேலும், செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு, இளம் வயதில் உளவியல் மற்றும் நரம்பியல் வளர்ச்சியில் சிக்கல்கள் உள்ளது என்ற தவறான எண்ணத்தையும் இந்த ஆய்வு நீக்குகிறது” என்று அலெக்ஸாண்ட்ரா மார்னியுனிக் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நோய்த்தொற்றுகளால் கர்ப்பத்தில் ஏற்படும் சிக்கல்கள்.. ஆஸ்பிரின் மாத்திரை தீர்வா!; ஆய்வு கூறுவது என்ன? - aspirin help during pregnancy