சென்னை:குழந்தை பெறுவதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் தெரியுமா? ஆஃபீஸ், வேலைனு என்னோட லெவலே வேற ஆனா, இப்போ குழந்தைங்க, வீடுனு என் உலகமே சுருங்கிப் போச்சுனு வருத்தப்படுற பெண்கள் பல பேரை பார்த்திருக்கலாம்.
பிரசவம், அதற்கு பிந்தைய உடல் உபாதைகள், சிசேரியனாக இருந்தால் அதற்கு பிந்தைய உடல் எடை, ஹர்மோன் பிரச்சனைகள் இவை எல்லாம் ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்பவை தான். ஆனால் 20 லிருந்து 30 வரையிலான வயது, ஆண் , பெண் என இருபாலருக்குமே முக்கியமான வயது. கல்லூரிப் படிப்பு முடித்து வெளி வரும் இவர்கள் தாங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் கால கட்டம்.
தொழில் ரீதியாக எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடித்தளமே இந்த வயதில் தான் நடக்கிறது. ஆனால் திருமணம், குழந்தை என்பது ஆண்களை விட அதிக அளவில் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கட்டுப்படுத்துவது பெண்களைத் தான். இப்படிப்பட்ட சூழலில் தொழிலுக்காக திருமணத்தை தள்ளிப் போடும் பெண்கள், இது தாங்கள் தாயாகும் வாய்ப்பை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என நினைக்கின்றனர்.
மருத்துவ ரீதியாகவே 30 வயதைத் தாண்டினால் குழந்தைப் பேற்றிற்கான வாய்ப்பு குறையத் தொடங்குகிறது என மகப்பேறு மருத்துவர்களும் கூறுகின்றனர். வேலையும் முக்கியம், தாயாவதும் முக்கியம் என கருதும் பெண்கள், மருத்துவ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளனர்.
இந்த சூழலில்தான், 'கருமுட்டை உறைவித்தல் (Egg Freezing)' கலாச்சாரம் இந்திய அளவில் பிரபலமாக தொடங்கி இருக்கிறது. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் தங்கள் கருமுட்டைகளை Freeze செய்து வரும் நிலையில், இது எதற்காக செய்கிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
இது ஆரம்பகட்டத்தில் மருத்துவ ரீதியான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது சாதாரண மக்களும் இதனால் பயன்பெறும் சூழல் உருவாகி உள்ளது எனக்கூறுகிறார், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலாளரும், மகப்பேறு மருத்துவருமான சாந்தி. அவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியை பார்க்கலாம்.
சாந்தி, மகப்பேறு மருத்துவர் (ETV Bharat Tamil Nadu) 'கருமுட்டை உறைவித்தல் (Egg Freezing)' என்றால் என்ன?: மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணின் ஓவரியில் மருந்துகள் செலுத்தப்படும். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கருப்பையில் குறிப்பிட்ட அளவிலான கருமுட்டைகள் உருவாகும். அந்த கருமுட்டைகளை கர்ப்ப பையில் இருந்து வெளியே எடுத்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் அதை வருடக்கணக்கில் பாதுகாப்பதே 'கருமுட்டை உறைவித்தல் (Egg Freezing)' எனக்கூறப்படுகிறது. இப்படி உறைவிக்கப்படும் கருமுட்டைகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கருவுற செய்ய முடியும்.
'கருமுட்டை உறைவித்தல் (Egg Freezing)' முதன் முதலில் எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?: இது ஆரம்பத்தில் மருத்துவ ரீதியான காரணங்களுக்கும், தேவைகளுக்குமே அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை எடுக்கும் பெண்களின் கருமுட்டை பாதிக்கப்படும் என்பதால், அவர்களின் கருமுட்டை முன்கூட்டியே எடுத்து உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
அவர்களது சிகிச்சை உள்ளிட்ட தேவைகள் நிறைவுற்ற பிறகு அந்த கருமுட்டையை வைத்து குழந்தை பிறக்கச் செய்வார்கள். இது காலப்போக்கில் மாற்றம் அடைந்து தற்போது குழந்தை வேண்டாம், படிக்க வேண்டும், துறையில் சாதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குறிக்கோள்களோடு இருக்கும் பெண்கள் மற்றும் தம்பதிகள் இந்த 'கருமுட்டை உறைவித்தல்' முலம் பயனடையத்தொடங்கி உள்ளனர்.
கருமுட்டைகளை எத்தனை நாட்கள் பாதுகாக்க முடியும்?அதற்காகும் செலவு எவ்வளவு?:கருமுட்டைகளை ஒரு பெண்ணில் கருப்பையில் இருந்து எடுத்து நைட்ரஜன் திரவத்தில் உறைய வைத்து அதை பல வருடங்கள் வரை பாதுகாக்க முடியும். அது ஒரு பெண் கருமுட்டை கொடுக்கும் நாள் மற்றும் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருக்கும் நாளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இதை பாதுகாக்க ஃபெர்டிலிட்டி (fertilityy) மையம் வாடகை அடிப்படையில் கட்டணம் பெறப்படுவதாகவும், அது மையங்களுக்கு மையம் மாறுபடலாம் எனவும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி கூறியுள்ளார்.
சாதாரண மக்களும் அணுகி இந்த தேவையை பூர்த்தி செய்து வரும் சூழல் உருவாகி உள்ளது எனக்கூறிய அவர், அதன் அடிப்படையில் கட்டணம் அனைவரும் எட்டும் நிலையில்தான் இருக்க வாய்ப்பு எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இது குறித்து சில தனியார் ஃபெர்டிலிட்டி மையங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, மாதம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை இருக்கலாம் எனவும், வருடத்திற்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சம் வரை ஆகலாம் எனவும் தெரிவித்தனர். இந்த கட்டணம் என்பது மருத்துவரை அனுகி சிகிச்சை பெற்றபின்பே தெரிய வரும் எனவும் கூறுகின்றனர்.
கருமுட்டையை உறைவித்து உருவாக்கப்படும் குழந்தையின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?:சாதாரணமாக பிறக்கும் குழந்தைக்கும் கருமுட்டை உறைவித்து வைக்கப்பட்டு அதன் மூலம் பிறக்க வைக்கப்படும் குழந்தைக்கும் இடையே பெரிய அளவில் எவ்வித ஆரோக்கிய ரீதியான சிக்கல்களும் இருக்காது என மருத்துவர் சாந்தி கூறுகிறார்.
கருமுட்டை உறைவித்து அதை மீண்டும் கருப்பையில் வைத்து குழந்தை பிறக்கச் செய்ய முடியுமா?:கருமுட்டையை மீண்டும் கர்ப்பபையில் வைத்து குழந்தை பிறக்க செய்ய முடியாது. அந்த கருமுட்டையை வெளியிலேயே வைத்து கருவாக உருவாக்கி அதன் பிறகு Embryuo transfer என்ற சிகிச்சையின் அடிப்படையில் அந்த கருவை கருவறையில் வைக்க முடியும். அதற்கும் அந்த பெண்ணின் வயது, மாதவிடாய் உள்ளிட்ட பொதுவான விஷயங்கள் ஆராயாப்படும்.
இதுவரை இந்தியாவில் கருமுட்டையை உறைவித்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?:நடிகை பிரியங்கா சோப்ரா, தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், நடிகையும், தொகுப்பாளருமான மந்திரா பேடி, நடிகை மற்றும் மாடல் மெஹ்ரின், பாலிவுட் நடிகை நேகா தூபியா, நடிகை மற்றும் மாடல் தாணி குப்தா, நடிகை ரிச்சா சதா, பாலிவுட் நடிகை மோனா சிங், முன்னாள் உலக அழகி டயானா ஹெய்டன், சமீபத்தில் பிரபல நடிகை மிருணாள் தாகூர், உள்ளிட்ட பலர் கருமுட்டை உறைவித்தல் மூலம் குழந்தை பிறக்க முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:தொடரும் தொழிலாளர்கள் உயிரிழப்பு: காலநிலை மாற்றம் காரணமா? ILO-வின் அறிக்கை.! - Climate Change Affect Labour Health