சென்னை: திரைப்பட இயக்குநர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குநராக அறியப்படுபவர். இந்த நிலையில், இவர் தனது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தம வில்லன் திரைப்படம் படுதோல்வி அடைய, அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக, திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், 9 வருடங்களாகியும் இதுவரை எந்த பதிலும் அளிக்காததால், நடிகர் கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கையாக, அவர் ஒப்புக்கொண்டபடி தயாரிப்பாளர் சங்கம் அவருடன் பேச்சுவார்த்தையை நடத்தி, எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்றுத் தரும்படி திருப்பதி பிரதர்ஸ் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தம வில்லன் பட வெளியீட்டின் போது கடன் கொடுத்த அனைவரும் தங்களை மிகவும் நெருக்கடி கொடுத்து வருவதாக திருப்பதி பிரதர்ஸ் சார்பாக, அதன் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் குறிப்பிட்டுள்ளார். உத்தம வில்லன் படத்தால் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியதால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு, கமல்ஹாசன் கால்ஷீட் பெற்றுத் தருமாறு திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.