ஹைதராபாத்:கடந்த இரண்டு நாட்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என எந்த சோஷியல் மீடியாவை ஓபன் செய்தாலும் அதில் 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவதைப் பார்த்து இருப்போம். இந்த ஹேஷ்டேக் எதற்காக ட்ரெண்ட் செய்யப்படுகிறது? 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்றால் என்ன என்பது குறித்து அறியலாம்.
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் கடந்த 26 ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 45 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதோடு சுமார் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பல்வேறு நாட்டின் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆல் ஐஸ் ஆன் ரஃபா:காசா நகரில் இஸ்ரேல் நடத்தி வரும் படுகொலையை குறிக்கும் வகையில் தான் சோஷியல் மீடியாக்களில் 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனை பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், கரீனா கபூர், மாதுரி தீட்சித், வருண் தவான், அலி கோனி, சமந்தா ரூத் பிரபு மற்றும் திரிப்தி டிம்ரி உட்பட இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "ஆல் ஐஸ் ஆன் ரஃபா" என்பதை பகிர்ந்துள்ளனர். இதே போல் இந்த போஸ்டரை 44 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பகிர்ந்துள்ளனர்.