சென்னை:தமிழ் சினிமாவின் நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் இளைய மகன் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ என்ற திரைப்படம் வெளியானது.
பின்னர், மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின், விஜயகாந்துடன் ‘தமிழன் என்று சொல்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், அப்படம் தேர்தல், விஜயகாந்த் மறைவு ஆகிய காரணத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது இயக்குநர் அன்பு இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில் 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடிகர் சண்முகபாண்டியன் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் பணிகள் இன்னும் முடியாததால் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இதையும் படிங்க:மதம் கடந்த காதல் கதை; வித்தியாசமான தலைப்புடன் உருவாகும் விமல் படம்!
விஜயகாந்த் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த படத்தை நான் நடித்து தருவதாக லாரன்ஸ் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், படைத்தலைவன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (நவ.30) இப்படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. உன் முகத்தை பார்க்கையிலே என்ற இந்த பாடலை இளையராஜா எழுதி இசை அமைத்துள்ளார். அனன்யா பட் பாடியுள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.