சென்னை: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாளைய இயக்குநர்' எனும் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன். முன்னதாக இவர் இயக்கிய 'குரங்கு பொம்மை' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் குவித்தது.
தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'மகாராஜா' படத்தை இயக்கியுள்ளார். இது விஜய் சேதுபதியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், 'தி ரூட்' எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், 'மகாராஜா' படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதால், அதனைக் கொண்டாடும் வகையில் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் (Burj Khalifa) 'மகாராஜா' படத்தின் முன்னோட்டத்தை ஒளிபரப்பி கொண்டாடினர். இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கில்லியைத் தொடர்ந்து ரீ ரிலீஸூக்கு தயாராகும் 'துப்பாக்கி'.. உற்சாக வெள்ளத்தில் விஜய் ரசிகர்கள்!
மேலும், நடிகர் விஜய் சேதுபதி தனது ஆரம்ப காலகட்டத்தில் துபாயில் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் 'மகாராஜா' படத்தின் முன்னோட்டம் ஒளிபரப்பப்பட்டது. இதனைக் கண்ட அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்துள்ளதும் தெரிய வருகிறது. மேலும், இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி, அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அஜனீஷ் லோக்நாத் 'மகாராஜா' படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகும் இப்படம், படத்தின் இயக்குநரின் முந்தைய படமான 'குரங்கு பொம்மை' படத்தை போலவே திரில்லிங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், இந்த படம் சிறந்த படமாக அமையும் என ரசிகர்கள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:மீண்டும் காதல் கதையில் சித்தார்த்.. “மிஸ் யூ” படத்தின் சுவாரஸ்ய அப்டேட்!