சென்னை:'குரங்கு பொம்மை' படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவரது 50வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் 'மகாராஜா'. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'மகாராஜா' திரையரங்குகளில் வெளியானது முதல் அனைவரது பாராட்டையும் பெற்றது.
அதிலும் குறிப்பாக, ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவரும் மகாராஜா திரைப்படத்தையும், அப்படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக் குழுவினரை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பெரிய நடிகர்களின் 50வது படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் ரீதியாக வெற்றியை பெறுவது என்பது ஒரு சில படங்களுக்கு மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அந்த வரிசையில், விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டு இன்றி ஓடிடி தளத்தில் வெளியாகி, அங்கேயும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள மகாராஜா, உலகளாவிய தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் பாராட்டுக்களை குவித்ததை தாண்டி, வழக்கமான பழிவாங்கும் கதையாக அல்லாது உலகத் தரமான திரைக்கதை மூலம் மிக சிறந்த படைப்பாக உருவாக்கியிருந்த இயக்குநர் நித்திலன் சாமிநாதன் என்று அனைத்து தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.