தேனி: தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் - லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு 10 வயது மகன் கவினாத் கொலை செய்யப்பட்டு, கம்பம் பகுதியில் உள்ள சாலையோர புதருக்குள் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இந்நிலையில், 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டது குறித்து கம்பம் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர், சிறுவனைக் கூட்டிச்சென்றது தெரியவர, விஜயை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுவனின் தாய், தான் வளர்த்த கோழி மற்றும் புறாக்களுக்கு விஷம் வைத்துக் கொன்றதால், அதற்கு பழி தீர்க்கும் விதமாக 10 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை அறிக்கை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: இன்ஸ்பெக்டர் மீது பாட்டில் குண்டு வீச்சு.. நள்ளிரவில் போதை கும்பல் அதகளம்..! நெல்லை பரபரப்பு!
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் 10 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக, இளைஞருக்கு ஆயுள் தண்டனை, 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அபராதத் தொகையைக் கட்ட தவறினால், கூடுதலாக ஆறு மாத கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்பளித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து குற்றவாளி விஜயை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்