திருவனந்தபுரம்:வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்து வரும் திரைப்படம் 'கோட்' (GOAT). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கோட் படப்பிடிப்பு இன்று முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துவங்கியுள்ளது. இதற்காக விஜய் நேற்று திருவனந்தபுரம் வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் கூடிய விஜய் ரசிகர்கள், ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வரையில், சாலை முழுவதும் ரசிகர்கள் விஜயை பார்க்க சூழ்ந்தனர். அப்போது நடிகர் விஜயின் காரை சூழ்ந்த அவரது ரசிகர்களால், கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
விஜயின் பாதுகாப்பு குழுவினர், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபில்டு சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பல நடிகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கோட் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:மீண்டும் தலைவரானார் ராதாரவி.. தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல் முடிவு வெளியானது!