சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிகராக நடித்த படங்களில் பிச்சைக்காரன் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் வெளியானது. தற்போது மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ககன மார்கன் என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை தனது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார். அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், A1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட்டிங் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால். மேலும் இவர் 2013ஆம் ஆண்டு 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்பட தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றவர்.
தற்போது “ககன மார்கன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள். வழக்கமான க்ரைம் த்ரில்லர் படமாக இல்லாமல், புதிய வகையான கதாபாத்திரங்கள், தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதை மற்றும் வித்தியாசமான அம்சங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.