ஹைதராபாத்: இந்திய சினிமாவில் பெரும் மதிப்புமிக்கதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மிதுன் சக்கரவர்த்தியின் சினிமாப் பயணம் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக உள்ளது.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி(74) இந்திய சினிமாத்துறைக்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வரும் அக்டோபர் 8ஆம் தேதி தேசிய விருது வழங்கப்படும் நிகழ்ச்சியில் அளிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
1976ஆம் ஆண்டில் தனது சினிமாப் பயணத்தை தொடங்கிய நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ம்ரிகயா (mrigayaa) என்ற கிளாசிக் பாலிவுட் திரைப்படம் மூலம் பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி நடித்த Disco Dancer, Kasam Paida Karne Wale Ki, Commando, OMG: Oh My God ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மிதுன் சக்கரவர்த்தி தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் ஆடியன்ஸை பல தசாப்தங்களாக ஈர்த்துள்ளார். 250 படங்களுக்கு மேல் மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார்.