மதுரை: பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்களுக்காக சென்னை திரும்புவதற்காக மதுரையில் இருந்து வரும் 19-ந் தேதி மெமு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள், பொங்கலை தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) இரவு முதல் திங்கட்கிழமை (ஜனவரி 13) வரை சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்ததால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தயாராகி உள்ளனர். ஏற்கெனவே ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், ஏற்கெனவே முன்பதிவு செய்யாதவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால், இதனை சமாளிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக முன்பதவில்லா மெமு ரயில் இயக்கப்படுகிறது. கழிப்பறைகளுடன் கூடிய சென்னை புறநகர் ரயில்களைப் போன்ற இந்த மெமு ரயில், மதுரையில் இருந்து ஜனவரி 19-ந் தேதி மாலை 4 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலில் இணைக்கப்படும் 8 ரயில் பெட்டிகள் அகலமான நுழைவு வாயில்கள், வசதியான இருக்கைகள், விசாலமான இடவசதி, கழிப்பறை வசதிகள் கொண்டவை. இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.