சென்னை: சென்னை, வால்டாக்ஸ் சாலை பகுதியில் 400 பெண்கள் ஒன்றுகூடி தைத் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கலந்து கொண்டார். முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் திமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் அப்பகுதி மக்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினார். மேலும், அப்பகுதி சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். சிலம்பம் சுழற்றிய சிறுவர் சிறுமிகளுக்கு அமைச்சர் பரிசுத் தொகையையும் வழங்கி பாராட்டினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, '' உள்ளமெல்லாம் மகிழ்ச்சி, இல்லங்கள் தோறும் எழுச்சி. திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனைகளால் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்காம் ஆண்டாக சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கலில் உலகத்தை முழு சுதந்திரத்தோடு காணுகின்ற ஆட்சி அமைந்திருக்கிறது. காணும் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்றார்.
பாகுபாடு கிடையாது
தொடர்ந்து சென்னை ஐஐடி மாணவி பாலியல் குற்ற சம்பவம் தொடர்பான கேள்விக்கு, '' நடைபெறுகின்ற குற்ற சம்பவங்களை தடுப்பது ஒரு புறம், நடந்த முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது மறுபுறம். இந்த ஆட்சியில் இன்னார், இனியவர் என்ற பாகுபாடு கிடையாது. தவறு யார் செய்திருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது.
இதையும் படிங்க: நாட்டிலேயே சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி தமிழ்நாட்டில் தான் நடக்கிறது - திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ!
ஐ.ஐ.டி. சம்பவம் தொடர்பாக உரிய குற்றவாளி கைது செய்யப்பட்டு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையை முதலமைச்சர் முடுக்கி விட்டுள்ளார். குற்ற சம்பவம் நடந்தால் அதன் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது'' என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, '' யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெற்றிக்கு உண்டான அறிகுறியாக, வெற்றிக்குரிய வெளிச்சமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிக்கொள்வோம்.
தமிழ்நாடு முதல்வரை போல கூட்டணி தலைவர்களை மதிப்பவர்களை எங்கும் காண முடியாது. கேட்கின்ற போதெல்லாம் கூட்டணி தலைவர்களுக்கு சட்ட பேரவையில் வாய்ப்பை தருகிறார். கட்சியின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் ஒன்றாக இணைந்து தான் இந்த வேட்பாளரை தேர்வு செய்து ஆதரித்திருக்கிறார்கள். கூட்டணி கட்சியை மதிக்கின்ற ஒரு தலைவர் நாட்டிலே உண்டு என்றால் அது தமிழ்நாடு முதலமைச்சர் தான்.
கூட்டணி கட்சியினர் குறைகளை சொன்னாலும் கூட அதனையும் நிவர்த்தி செய்து, அதன் பிறகு அவர்களை அழைத்து பேசும் அசைக்க முடியாத இரு கரங்களாக கைகோர்த்து பயணித்துக் கொண்டிருக்கிறது திமுக கூட்டணி'' என்றார்.